பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கஞ்சா புகைக்கிறார்... ஆர்.ஜே.டி. கட்சி எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு

 
நிதிஷ் குமார்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கஞ்சா புகைக்கிறார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. ராஷ்வன்ஷி மஹ்தோ குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில்  உள்ள செரியா பாரியார்பூர் சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ராஷ்வன்ஷி மஹ்தோ. இவர் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் மீது பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ராஷ்வன்ஷி மஹ்தோ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: முதல்வர் நிதிஷ் குமாரும் கஞ்சா புகைக்கிறார்.

ராஷ்டிரிய ஜனதா தளம்

இது போதைப்பொருள் பிரிவின் கீழ் வரும். மாநிலத்தில் கஞ்சா விற்பனை மற்றும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அவர் ஏன் கஞ்சா போதை பழக்கத்தை விடவில்லை?. பீகாரில் மதுவிலக்கு என்பது வெறும் கண்துடைப்பு.  மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மது கிடைக்கிறது. நிதிஷ் குமார் மக்களை ஏமாற்றுகிறார். பீகாரில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தால், நிதிஷ் குமார் ஏன் மற்றவர்களை உறுதி மொழி செய்ய வற்புறுத்துகிறார்? அதை ஏன் அவர் தன் மீது செயல்படுத்தவில்லை?

ராஷ்வன்ஷி மஹ்தோ

பீகாரில் ஏழை மக்கள் மூலம் மாபியாக்கள் செயல்படுகிறார்கள். மாநில காவல் துறை ஏழைகளுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கிறது, உண்மையான மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகாரில் மதுவிலக்கு சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக, அண்மையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது அமைச்சர்கள் மற்றும் மாநில உயர் அதிகாரிகளுடன் மது அருந்துவதில்லை என உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.