"போகுமிடமெல்லாம் குண்டு வைக்கும் ஆளுநர்; பின்னணியில் மத்திய அரசு" - வலுக்கும் டெல்லி vs தமிழ்நாடு பனிப்போர்!

 
ஸ்டாலின் ஆர்.என்.ரவி

எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் சரி ஆளுங்கட்சியாக வந்தபோதிலும் சரி மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு திமுக எதிராகவே இருந்துவருகிறது. இதனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருவரும் அடிக்கடி உறுதிப்படுத்துகின்றனர். தமிழ்நாட்டுக்கென புதிய கல்விக்கொள்கையை உருவாக்கப் போவதாகும் கூறியுள்ளனர். விஷயம் இப்படியிருக்க மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளது. ஆளுநர் செல்லுமிடமெல்லாம் தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பேசி வருவதே அதற்கு சாட்சி.

ஸ்டாலின் ஆர்.என்.ரவி

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர்,  புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் இருப்பதால் பல்கலைக்கழகங்களில் அதை அமல்படுத்த முன்வரவேண்டும் என்றார். இதனை எதிர்க்கும் விதமாக அமைச்சர் பொன்முடி பேசியிருக்கிறார். நேற்று முன்தினம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உயர்கல்வி வரை மாணவர்களுக்கேற்ப அமைய வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 

RN Ravi appointed new Governor of Tamil Nadu; Presidential order || தமிழக  புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமனம்; ஜனாதிபதி உத்தரவு

இதனால் நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் 51 சதவீத அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் அடித்தளம் என்றால், உயர்கல்வி வளர்ச்சிக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே பாணியில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இருமொழிக் கொள்கை என்பது புதிது அல்ல. பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் இருப்பது தான். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை இருக்க வேண்டும். 

அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை!

மூன்றாவது மொழியை மாணவர்கள் படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. அது விருப்பப் பாடமாக இருக்க வேண்டும். அது கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்துள்ளோம். அரசுக்கு ஆளுநர் ஆதரவாக இருக்க வேண்டும்” என்றார். அதேபோல நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "மாநிலத்துக்கான கல்விக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும். ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி பேசி வருகிறார். மாநில கல்விக் கொள்கை குழு அமைக்கப்படும். அப்போது தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெரியும்” என்றார்.