எப்படி முதல்வரானார் எடப்பாடி? என விரிவாகப் பேசத் தயார் - அவையில் கூச்சல் ஏற்படுத்திய அமைச்சர்

 
p

யார்,  யாரை உருவாக்கினார்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் யார் என்ற விவாதம் அவையில் எழுந்து  எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்பினார் அமைச்சர் சேகர்பாபு.  அவர் மேலும் , தேவைப்பட்டால் எப்படி முதல்வரானார் என விரிவாக பேச தயார் என்று சொன்னதை அடுத்து அவையில் சிறிது நேரம் கூச்சல் ஏற்பட்டது.

 சட்டமன்றத்தில் நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான மூன்றாவது நாள் விவாதம் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி,   ‘’கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’’ என்று குறிப்பிட்டார்.  அப்போது குறிப்பிட்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு,   ’’கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே!’’ என்று சொன்னார் . மேலும்,  ‘’ அப்போது நடைபெற்ற தேர்தலில் 98 உறுப்பினர்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கூற்றை பொய்யாக்கியவர் தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலின்’’ என்று சொன்னார்.

p

 இதற்கு பதில் அளித்த தங்கமணி,   ’’நான் உங்களைப் பற்றி குறிப்பிடவில்லை.  புரிய வேண்டியவர்களுக்கு புரியும்’’ என்று குறிப்பிட்டார் .  இதை அடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,   ’’சேகர்பாபுவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவானவர்’’ என்று குறிப்பிட்டு பேசினார்.

 இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு,   ’’யார் யாரை உருவாக்கினார்கள் என்பது விவாதம் அல்ல . மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் யார் ஆட்சியைப் பிடித்தவர்கள் என்பதுதான் விவாதம்.   அது மக்களுக்கு தெரியும்’’ என்றார்.   இதனால் பேரவையில் சிறிது நேரம் கூச்சல் ஏற்பட்டது .

மீண்டும் பேசிய அமைச்சர் சேகர்பாபு ,  ‘’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் முதல்வர் ஸ்டாலின்.  ஆனால் முதல்வர் வேட்பாளர் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் மக்கள் முதல்வரானார்.   ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? ’’என்ற கேள்வியை எழுப்பினார்.

 தொடர்ந்து அது குறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,   ’’தேவைப்பட்டால் எப்படி முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி என்பது குறித்து விரிவாக பேச தயார்’’ என்று சொன்னதால் அவையில் சிறிது நேரம் கூச்சல் ஏற்பட்டது.