"சீமான் வாய்க்கு வந்ததெல்லாம் உளறுகிறார்; பொறுப்பு வேணும்” - ஆர்.பி. உதயகுமார் அட்வைஸ்!
தமிழ்நாட்டின் டிஜிட்டல் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதற்குக் காரணம் ஆளுங்கட்சி திமுகவுக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தான். அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய சீமான், மேடை நாகரிகத்தை மீறி திமுகவை சங்கி என திட்டி செருப்பை அடிப்பேன் எனக்கூறி அதை தூக்கியும் காட்டினார். இது திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இச்சூழலில் நேற்று முன்தினம் தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஹிம்லர் திமுகவையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் இழிவாகப் பேசினார்.
இதனால் கோபமடைந்த திமுகவினர் பேச்சை நிறுத்தும்படி மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மேடையில் நாம் தமிழர் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக திமுகவினர் இவர்கள் பேச்சுக்கு இப்படி தான் செய்ய வேண்டும் என கொண்டாடுகின்றனர். நாம் தமிழர் கட்சி ஆட்களோ, பதிலுக்குப் பதில் கருவறுப்போம் என கூறிக் கொண்டிருக்கின்றனர். நடுநிலைகளோ, இரு கட்சிக்காரர்கள் செய்ததும் தவறு என சென்டர் ஸ்டாண்ட் போட்டுவிட்டனர்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் ஊடக நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி கொடுத்துள்ள அவர் பேசியது பின்வருமாறு:
ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு ஏற்பட்ட தாக்குதலாகவே இதனையெல்லாம் பார்க்கிறேன். அதேசமயம், கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. அப்படியே பேசினாலும் நீதிமன்றத்தின் மூலமாக தண்டனைக் கொடுக்கவேண்டுமே தவிர நாமே கொடுப்பது ஆளும் அரசுக்கு அழகல்ல. காட்டுமிராண்டிக் காலத்தை நினைவுப்படுத்துவதாகவே இதுபோன்ற தாக்குதல்கள் உள்ளன. எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல. அகிம்சையால் சுதந்திரம் பெற்ற தேசம் இது.
நாம் நாகரீக உலகில் இருக்கிறோம். எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் விமர்சிக்கிறார்கள். எல்லோரையும் தேடி அடிக்கமுடியுமா? திமுக இப்படியே தொடர்ந்தால் மீண்டும் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கிவிட்டது என்று மக்கள் நினைப்பார்கள். வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடாது. இந்தத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதேசமயம், கருத்து சொல்லும் சீமானும் பொறுப்புணர்வுடன் பேசவேண்டும்.
அது தனிநபர் தாக்குதலாகவோ விமர்சனமாகவோ இருக்கக்கூடாது. நம் அடிப்படைச் சட்டங்களை மீறாமல் கருத்துச் சொல்லவேண்டும். கண்டதெல்லாம் பேசக்கூடாது. தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் தன் இருப்பை காட்டுவதற்கும் வரம்புமீறி பேசக்கூடாது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான லட்டர்பேடு கட்சிகள் உள்ளன. அவர்கள் எல்லோரும் தனது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள வரம்புமீறி எல்லைமீறி செயல்படுகிறார்கள். மக்கள் அதனை ரசிக்கமாட்டார்கள். சீமான் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.