இனி கட்சி நடத்துவதில் அர்த்தம் இல்லை- ராமதாஸ் ஆவேசம்

 
ramadoss

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு பாமகவினர் விலை போனதால் தேர்தலில் போட்டியிட கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே இனி கட்சி நடத்துவதில் அர்த்தம் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்கும் திண்டிவனம், மயிலம், செஞ்சி, வானூர் ஆகிய 4 தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், “எனது  42 ஆண்டுகால அரசியல் பயணத்தில் பாமக என்கின்ற கட்சியை தொடங்கி 32 ஆண்டுகாலம் ஆகின்றது. ஆனால் இன்று வரை ஒரு முறை கூட தமிழகத்தில் நாம் ஆட்சியை பிடிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் 5000 ஒன்றிய கவுன்சிலர்கள். இதில் 145 மட்டுமே வெற்றி பெற்றோம். மயிலம், திண்டிவனம், வானூர், செஞ்சி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதியில் பத்து ஒன்றிய கவுன்சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். 

கடந்த 32 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து தொடர்ந்து போட்டியிட்டு வந்தோம். அதன் பயனாக 18, 20 என்று சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றோம். ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மத்திய அமைச்சர்களையும் பெற்றோம். பத்து ஆண்டுகாலம் மத்தியில் கூட்டணியில் அங்கம் வகித்து வகித்தோம் . இதற்கு காரணம் கூட்டணி வைக்க சொன்னது தான் காரணம் என்று கூறினீர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் நமது தலைவர் ஜிகே மணியை அழைத்து அதிமுகவினர் 5 தொகுதி தான் தருவேன் என்று கண்டிப்பாக அதிமுகவினர் கூறினர். பிறகு 10 தொகுதி அப்புறம் இருபது. இருபத்தி மூன்று தொகுதிகளாக மாறியது. இதற்கு மேல் உங்களுக்கு பலம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் இதில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். ஆனால் மூன்றாவது பெரிய கட்சி பாமக என்று சொல்லி வருகிறோம். இன்னும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் அங்கீகாரம் கிடைத்திருக்கும். 

பல இடங்களில் வேட்பாளர் நிறுத்த கூட நமக்கு ஆளில்லை என்று மாவட்டசெயலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் நாம் தமிழகத்தில் போட்டியிடவே ஆளில்லை என்று கூறும் போது நமக்கு வெட்கக்கேடு. நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரிடம் பாட்டாளி மக்கள் கட்சியினர் விலை போய்விட்டனர். தேர்தலில் போட்டியிடாமல் திமுக. அதிமுகவினரிடம் கூட்டு வைத்துக் கொண்டனர். இதனால் தேர்தலில் போட்டியிடவே ஆளில்லை என்கிற நிலை ஏற்பட்டு பலவீனமாகி விட்டோம். இதனால் இனிமேல் தொடர்ந்து கட்சி நடத்துவதில் அர்த்தமில்லை. கட்சி தொடங்கிய 32 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக நம்மைப் போன்று போராடியவர்கள் யாருமே இல்லை. அதாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் நம்மிடம் உள்ள இளைஞர், இளம்பெண்கள் எந்த கட்சியிலும் கிடையாது. எனவே 60 சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மற்ற கட்சியினரை நம்மை தேடி வரவேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்குபாமகவினர் இன்று முதல் பணியாற்ற வேண்டும்” எனக் கூறினார்.