கடன் வாங்கிய ஈரம் கூட காயல.. படகுகளை ஏலம் விட என்ன உரிமை இருக்கு.. இலங்கை அரசை விளாசிய ராமதாஸ்...

 
ராமதாஸ்

இந்தியாவிடமிருந்து  இலங்கை அரசு ரூ. 18,090 கோடி கடன் வாங்கிய ஈரம் கூட காயாத நிலையில்,  தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விட இருப்பதாக இலங்கை  அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை பிப்ரவரி 7 ஆம் தேதி முதல், 5 நாட்களுக்கு ஏலம் விட இருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்கக்கோரி  பல்வேறு  தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மேலும் ஓர் அத்துமீறலை இலங்கை அரசு  செய்திருக்கிறது.  இலங்கை அரசின் இந்த அறிவிப்பு மீனவர்களிடையே  கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருக்கிறது.  இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.

மீனவர்கள் போராட்டம்

அந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.  அதில், “ தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கான உரிமை இலங்கை அரசுக்கு இல்லை.  சிங்களப் படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும்,  பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கும்படி இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சரே பேசிய நிலையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பு இந்தியாவை அவமதிக்கும் செயலாகும்.

ராமதாஸ்

இந்தியாவிடமிருந்து  இலங்கை ரூ.18,090 கோடி கடன் வசதி பெற்றுள்ளது. உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை  அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல. இலங்கையின் உண்மை முகத்தை இந்தியா அறிய வேண்டும். மீனவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டால் அவர்களின் படகுகளையும் ஒப்படைக்க இலங்கை கடந்த காலத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.