பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை.. ராகேஷ் டிக்கைட்

 
ராகேஷ் டிக்கைட்

பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் பல எல்லைகளில் கடந்த ஒராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது உரையில், வேளாண் சட்டத்தின் பயனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. வேளாண் சட்டங்களின் பயனை விளக்க முடியாதது எங்கள் தவறு எனக் கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். 

மோடி

பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டு பல நாட்கள் கடந்த நிலையில், பிரதமர் மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை என்று ராகேஷ் டிக்கைட் தற்போத தெரிவித்துள்ளார். பாரதிய கிசான் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகேஷ் டிக்கைட் டிவிட்டரில், பிரதமர் மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை. வெளிநாட்டில் அவரது நற்பெயருக்கு களங்கள் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எந்தவொரு முடிவு எடுக்கப்பட்டாலும், அது விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் எடுக்கப்படாது. நாங்கள் நேர்மையாக வயல்களில் சாகுபடி செய்கிறோம். ஆனால் டெல்லி (மத்திய பா.ஜ.க. அரசு) எங்கள் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தவில்லை என்று பதிவு செய்து இருந்தார்.

கூடாரங்களை அகற்றும் விவசாயிகள்

கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. மேலும் பல விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை முடித்து கொண்டு தங்கள் வீட்டுக்கு திரும்பினர்.