கத்ரீனா கைப் கன்னங்கள் போல் சாலைகள்.. பதவியேற்ற சில தினங்களில் சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்

 
கத்ரீனா கைப்

ராஜஸ்தானில் அமைச்சராக பதவியேற்று சில தினங்களே ஆன நிலையில், கத்ரீனா கைப் கன்னங்கள் போல் சாலைகள் போடப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அம்மாநில அமைச்சர் ராஜேந்திர குடா.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்  தலைமையிலான அமைச்சரவை முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. சச்சின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் உள்பட மொத்தம் 15 அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சராக பதவியேற்றவர்களில் உதய்பூர்வதி சட்டப்பேரவை தொகுதி ராஜேந்திர குடாவும் ஒருவர். அமைச்சராக பதவியேற்ற ஒரு சில தினங்களில் ராஜேந்திர குடா செக்சியாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அசோக் கெலாட்

ராஜஸ்தான் அமைச்சராக பதவியேற்ற பிறகு நேற்று முதல் முறையாக தனது தொகுதியான உதய்பூர்வதிக்கு சென்றார். அந்த தொகுதியில் உள்ள பயோன்க் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அந்த பகுதி மக்கள் தங்களது கிராமத்துக்கு எப்போது சாலைகள் போடுவீர்கள் என்று கேட்டனர். அதற்கு சாலை தொடர்பான உண்மையான விவரங்களை கூறாமல் அந்த பகுதி மக்களுக்கு உறுதியளிக்க முயன்றார். 

ராஜேந்திர குடா

மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரிடம், நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று சாலைகள் எனது தொகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்று நகைச்சுவையாக தெரிவித்தார். இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்தனர். முதலில் நடிகையின் பெயரை கேட் கைப் என்று தவறுதலாக அமைச்சர் கூறினார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் கத்ரீனா கைப் என்று திருத்தினர். உடனே அமைச்சர் ராஜேந்திர குடா நிர்வாகம் கத்ரீனா கைப் கன்னங்கள் போல் சாலைகள் போடும் என்று மீண்டும் தெரிவித்தார். அமைச்சர் ராஜேந்திர குடா நடிகையின் கன்னத்துடன் சாலையை ஒப்பிட்டு செக்சியாக பேசிய வீடியோ வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதனால் அமைச்சர் ராஜேந்திர குடா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.