உண்மையை சொன்ன ஆசிரியர்கள்.. வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ராஜஸ்தான் முதல்வர்.. சிக்கலில் காங்கிரஸ்

 
அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நிகழ்ச்சி ஒன்றில் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு பணம் (லஞ்சம்) வாங்கப்படுகிறது என்பது உண்மையா என்று கேட்டதற்கு, ஆசிரியர்கள் ஆமாம் என்று தெரிவித்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஜெய்பூரில் ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலாட்,  அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் தோதாஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலாட் கேட்ட கேள்விக்கு ஆசிரியர்கள் அளித்த பதில் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

லஞ்சம்

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், முதல்வர் அசோக் கெலாட்,  ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது என்று குற்றச்சாட்டு உண்மையா என்று கூட்டத்தினரை நோக்கி கேட்கிறார். அதற்கு கூட்டத்தினர், ஆம் நாங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று பதில் அளித்தனர். இந்த பதிலை சற்று எதிர்பார்க்காத அசோக் கெலாட் பேச முடியாமல் திகைத்து விட்டார்.

பா.ஜ.க.

இருப்பினும் பின்னர் இந்த பிரச்சினை குறித்து விசாரிப்பதாக உறுதியளித்தார். ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு பணம் கொடுப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இதனை  தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் தோதாஸ்ரா பேசுகையில், ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கான கொள்கை அமலாக்கத்துடன் இது (இடமாற்றங்களுக்கு பணம் கொடுத்தல்)  நீக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த வீடியோ எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கு 2023 சட்டப்பேரவை தேர்தலில் பெரிய ஆயுதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.