பிரதமர் மோடி அப்படி கூறியிருக்கக் கூடாது... ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

 
சாலையில் 20 நிமிடங்கள் நின்ற மோடி  வாகனம்

நான் பதிண்டா விமான நிலையத்துக்கு  உயிருடன் வந்தடைந்ததற்கு உங்கள் முதல்வருக்கு (பஞ்சாப் முதல்வர்) நன்றி என்று மோடி கூறியிருக்கக் கூடாது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் பிரதமர் நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் நடத்திய சாலை மறியலால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. இதனையடுத்து பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி  பயணத்தை ரத்து செய்து விட்டு பதிண்டா விமான நிலையத்துக்கு சென்று அங்கு இருந்து டெல்லி சென்றார்.

பிரதமர் மோடி

பதிண்டா விமான நிலையத்திலிருந்து டெல்லி கிளம்பி செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள விமான நிலைய அதிகாரிகளிடம், நான் பதிண்டா விமான நிலையத்துக்கு  உயிருடன் வந்தடைந்ததற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றார். மோடியின் இந்த வார்த்தை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மோடி அப்படி கூறியிருக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தெரிவித்தார்.

அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்று காங்கிரஸ் கூற விரும்புகிறது. இதில் அரசியல் நடத்தப்படுவது வருந்தத்தக்கது. பிரதமர் அப்படியொரு கருத்தை (நான் பதிண்டா விமான நிலையத்துக்கு  உயிருடன் வந்தடைந்ததற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி)  கூறியிருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.