அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பில்லை- ராஜன் செல்லப்பா

 
rajan chellappa

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களை மீண்டும் அதிமுகவில் இனைத்துகொள்ள வாய்ப்பே இல்லை என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மேலூர் அருகே வல்லாளபட்டி பேரூராட்சியில் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை கிழக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். 

இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ராஜன் செல்லப்பா, “தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக தலைமையிலேயே கூட்டணி அமையும். 

அடுத்த சில நாட்களில் நீதிமன்ற உத்தரவின்மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். அப்போது அவர் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளுக்கும் கட்சி தொண்டர்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள்” என தெரிவித்தார்.