ஆளுநர் தனிநபர் அல்ல; அவர் ஒரு ஸ்தாபனம்! தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ்பவன் முற்றுகையா? வெடிக்கும் கிருஷ்ணசாமி
ஆளுநர் ஆர். என். ரவியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கண்டித்து வரும் 12ஆம் தேதி அன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர் .
ஆளுநராக ஆர்.என். ரவி தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் அவரின் பேச்சுக்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உரியதாகவும் , மர்மமானதாகவும் இருக்கின்றன . அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக , ஆர். எஸ் எஸ் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்ள துடிக்கின்றார் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .
ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்ட ஆளுநர் தன் பிரமாண உறுதிமொழியினை மீறி பேசுவது அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. சாதாரண ரவியாக இருந்தால் இது போன்ற அபத்த குரல்கள் பொருட்படுத்தத்தக்கது அல்ல. ஆளுநராக இருப்பதால்தான் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆளுநர் பதவி எந்த மாநிலத்திற்கும் அவசியம் இல்லாத பதவி. தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து இரட்டை ஆட்சி நடத்துவதற்கு பாஜக இணைத்து அவர்களை மகிழ்விக்க தினமும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் வரும் 14ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஆளுநர் தனிநபர் அல்ல அவர் ஒரு ஸ்தாபனம். ராஜ் பவன் முற்றுகை ஜனநாயக மீறலின் அடையாளம் என்கிறார்.
சென்னை ராஜ் பவன் தர்பார் ஹாலில் நடந்த குடிமை பணி தேர்வர்களுடனான கலந்துரையாடலின் போது ஆளுநர்களின் அதிகாரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு ஆளுநர் அளித்த பதில் மீண்டும் விவாதமாக்கப்பட்டிருக்கிறது . சர்ச்சையாக்கப்பட்டு இருக்கிறது . பெரும் பேசும் பொருளாகி இருக்கிறது என்று சொல்லும் கிருஷ்ணசாமி, ஆளுநர்கள் என்றாலே ராஜ் பவனுக்குள் முடங்கி கிடக்க வேண்டும், ஆண்டுக்கு இரண்டு முறை சட்டமன்றத்தில் சம்பிரதாயத்திற்காக உரை நிகழ்த்த வேண்டும் குடியரசு தின விழாவில் கொடியேற்ற வேண்டும் என்று மட்டுமே தமிழகத்தில் தவறான பார்வை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தை ஆழ்ந்து படிப்போர் அப்படி கருத மாட்டார்கள் என்கிறார்.
அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற ஆளுமை பதவிகளுக்கு வரும் தேர்வர்கள் இந்திய அரசியல் சாசனம் ஜனாதிபதி அதிகாரங்கள் ஆளுநர் அதிகாரங்கள் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் அதிகார வரம்புகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு ஆளுநரின் உச்சபட்ச பொறுப்பே அரசியல் சாசனத்தை கட்டி காப்பது என்பதையும் மத்திய அரசு மாநில அரசு எதுவாக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் என்றும் தெளிவாக ஆளுநர் விளக்கி இருக்கிறார் அப்படி இருக்கும்போது அரசியலமைப்போடு பின்னிப் பிணைந்தது என்று தெளிவுபடுத்துகிறார் ஆளுநர் மாணவர்களுடன் ஆன உரையாடலின் போது அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்த ஒரு நிகழ்வை ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியினரும் அரசியல் கோணத்தில் இருந்து அணுகுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார் கிருஷ்ணசாமி.
ஜனாதிபதியும், ஆளுநரும், மாநில சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும் என்பதை அவர் விளக்கி இருக்கிறார் . அரசியல் சாசன விதிகளை ஆளுநர் விளக்கியதற்கு குதர்க்கமாக விளக்கங்களை கொடுப்பதும் உடனடியாக ஆளுநருக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு போராடுவதும் ஜனநாயக நடைமுறைகளா? இவர்கள் பேச,எழுத தேர்தலில் போட்டியிட வெற்றி பெற பதவிகளை அனுபவிக்க வசதியாக அரசியல் சாசன உண்மைகளை பற்றி பேசுவார்கள். ஆனால் அவர்களின் அரசியல் சாசன வரம்பு மீறிய செயல்களை ஆளுநர் கண்காணித்தால் தவறுகளை கட்டி காட்டினால் தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ் பவன் முற்றுகையாம். இவர்களுக்கு இதற்கெல்லாம் எங்கிருந்து இந்த உரிமை வந்தது யார் கொடுத்தது என்று கேட்கும் கிருஷ்ணசாமி , ஆளுநர் என்பவர் தனிநபர் அல்ல அவர் ஒரு ஸ்தாபனம் . இந்திய அரசியல் சாசனத்தை கட்டிக் காக்கும் காவலர். ஆகவே ராஜ் பவன் முற்றுகை ஜனநாயக மீறலின் அடையாளம் என்பதை புரிந்து செயல்படுங்கள் என்பதுதான் தேசிய ஜனநாயகவாதிகளின் வேண்டுகோள் என்கிறார்.