ஜனவரி 2வது வாரத்தில் ராகுல் காந்தி நாடு திரும்புவார். காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

 
ராகுல் காந்தி

தற்போது வெளிநாட்டில் இருக்கும் ராகுல் காந்தி, ஜனவரி 2வது வாரத்தில் இந்திய திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என தகவல் அறிந்த காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது கட்சியின் உயர் பதவிகளில் இல்லையென்றாலும், கட்சி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் ராகுல் காந்தியின் பங்களிப்பு பெரிதும் இருக்கும்.  அடுத்த சில மாதங்களில் உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த சூழ்நிலையில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ராகுல் காந்தி திடீரென இத்தாலிக்கு கிளம்பி சென்று விட்டார்.

4 மாதத்தில் 14 கோடி வேலைகள் இழப்பு.. மோடி இருந்தால் அது சாத்தியம்.. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கிண்டல்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ராகுல் காந்தி குறுகிய கால பயணம் மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க.வும், அதன் ஊடக நண்பர்களும் தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தேவைப்படும் முக்கியமான நேரங்களில் இந்தியாவில் இருப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. அதனை உறுதி செய்வது போல், தற்போதைய ராகுலின் இத்தாலி பயணம் அமைந்துள்ளது என்று கூறப்பட்டது.

காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில், வெளிநாட்டில் உள்ள ராகுல் காந்தி ஜனவரி 2வது வாரத்தில் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதேசமயம், கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதால் காங்கிரஸ் கட்சி  தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கூட்டங்களை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.