கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கொடுங்க.. மத்திய அரசை வலியுறுத்தும் ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

கொரோனாவால் இறந்தவர்கள் குறித்து சரியான புள்ளிவிவரத்தை வெளியிட வேண்டும், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோவிட், வேலையின்மை, எல்லையில் சீன அத்து மீறல், பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். தற்போது நம் நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் கொடுங்க என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா கொரோனா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், கோவிட் தொடர்பாக குஜராத் மற்றும் மத்திய அரசை விமர்சித்து ஒரு வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில், குஜராத்தில் கோவிட்டால் தங்களது உறவினர்களை பறிகொடுத்தவர்கள் தாங்கள் பட்ட கஷ்டங்கள், மத்திய அரசின் இழப்பீடு போதாது என்று கூறுகின்றனர்.   ராகுல் காந்தி அந்த வீடியோவில் பல்வேறு செய்திகளை குறிப்பிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்கிறார்.

கொரோனா வைரஸ்

குஜராத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் இறந்துள்ளனர்.  அதேநேரத்தில் அதிகாரப்பூர்வ தரவு 10 ஆயிரம்  கோவிட் இறப்புகளை மட்டுமே கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி அந்த டிவிட்டில், காங்கிரஸ் கட்சிக்கு 2 கோரிக்கைகள் உள்ளன.  1. கொரோனாவால் இறந்தவர்களின் சரியான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட வேண்டும். 2. கோவிட் நோயால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நான்கு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு இருந்தால், மக்கள் படும் துன்பம் களையப்பட வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.