விவாதத்தை நடத்த இந்த அரசு பயப்படுகிறது.. வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளின் வெற்றி.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

விவாதத்தை நடத்த இந்த அரசு பயப்படுகிறது, வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளின் வெற்றி என்று  ராகுல் காந்தி தெரிவித்தார்.


மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த ஒராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்ட உறுதியை பார்த்து, அந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

மோடி

மத்திய அரசு வாக்குறுதி அளித்தப்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இனி இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மக்களவையில் வேளாண் சட்டங்களை ரத்து  செய்வதற்கான மசோதா கொண்டு வந்தபோது, அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால் அதற்கு  அரசு மறுத்து விட்டது. இதனையடுத்து 4 நிமிடங்களில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் சட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டும் என்று முன்பு கூறியிருந்தோம். இன்று இந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்கள் விவாதிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. விவாதத்தை நடத்த இந்த அரசு பயப்படுகிறது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மக்களின் பலத்தை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. வரவிருக்கும் மாநில தேர்தல்களும் அவர்களின மனதில் விளையாடியிருக்க வேண்டும். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளின் வெற்றி.  3 முதல் 3 கோடீஸ்வர முதலாளிகளின் சக்தி விவசாயிகளின் வலிமையை தாங்க முடியாது என்பது நமக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.