பாங்காங் ஏரியில் பாலம் கட்டும் சீனா.. பிரதமரின் மௌனம் பலமானது.. ராகுல் காந்தி விமர்சனம்

 
ராகுல் காந்தி

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள பாங்காங் ஏரியில் சீனா பாலம் கட்டி வருவது தொடர்பாக பிரதமர் மோடி எதுவும் பேசாததை குறிப்பிட்டு, பிரதமரின் மௌனம் பலமானது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

லடாக்கில் உள்ள பாங்காங் எல்லை தொடர்பாக இந்தியா-சீனா இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள  பாங்காங் ஏரியின் குறுக்கே ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் சீனா பாலம் கட்டுவது செயற்கைகோள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இதனால் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சீனா பாலம் கட்டி வருவதை வெளிப்படுத்தும்  செயற்கைகோள் படம்

சீனாவுடனான எல்லை சூழலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் கையாளும் விதத்தை காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு லடாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ரத்தகளரி மோதல்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி

பாங்காங் ஏரியின் மீது சீனா பாலம் கட்டி வருவது தொடர்பாக பிரதமர் மோடி எந்தவிதமாக கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், பிரதமரின் மௌனம் பலமானது. நமது நிலம், நமது மக்கள், நமது எல்லைகள் சிறந்தவை என்று பதிவு செய்துள்ளார்.