நாகலாந்து துப்பாக்கிச்சூடு.. மத்திய அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும்... ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 13 பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டது குறித்து மத்திய அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தின் ஓடிங்-திரு கிராமத்துக்கு அருகே தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், அங்கு ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்த ஓடிங் மற்றும் திரு கிராம தொழிலாளர்களை தீவிரவாதிகள் என கருதி அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பற்றி எரியும் வாகனங்கள்

இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த மக்கள் பாதுகாப்பு படையினரின் 3 வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தற்காப்புக்காக பொதுமக்களை நோக்கி சுட்டதாகவும், இதில் 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல். மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரர் கொல்லப்பட்டதாக செய்தி.நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய உள்துறை அமைச்சகத்தை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், இது இதயத்தை உலுக்குகிறது. மத்திய அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும். நமது சொந்த நிலத்தில் பொதுமக்களோ அல்லது பாதுகாப்பு பணியாளர்களோ பாதுகாப்பாக இல்லாதபோது உள்துறை அமைச்சகம் துல்லியமாக என்ன செய்கிறது?

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு நியமித்துள்ள உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும் என்று அமித் ஷா தெரிவித்தார்.