பிரதமர் மோடி கங்கையில் நீராடினார்.. ஆனால் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசவில்லை.. ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் கங்கையில் நீராடினார். ஆனால் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
உத்தர பிரதேசம் அமேதி தொகுதியில் ஜகதீஷ்பூரில் காங்கிரஸ் சார்பில் பணவீக்க எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அமேதி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கலந் கொண்டார். அந்த பேரணியில் பொதுமக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: நான் 2004ல் அரசியலுக்கு வந்தேன். அமேதியில்தான் நான் முதல் முதலில் தேர்தலில் போட்டியிட்டேன்.
அமேதி மக்கள் எனக்கு அரசியல் பற்றி நிறைய கற்றுக் கொடுத்துள்ளனர். நீங்கள் எனக்கு அரசியலுக்கு வழி காட்டியுள்ளீர்கள். அமேதியில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் பெரிய அளவில் வேலையின்மையும் ஏற்பட்டது. பணப்மதிப்பிழப்பு, தவறாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., கோவிட் நெருக்கடியின்போது எந்த உதவியும் இல்லாதது ஆகியவை இந்தியாவில் வேலையின்மைக்கு முக்கிய காரணங்கள்.
இன்றைய நிலைமை உங்களுக்கு தெரியும். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய கேள்விகளாக உள்ளன. ஆனால் அது குறித்து முதல்வரோ, பிரதமரோ பதிலளிக்க மாட்டார்கள். பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் கங்கையில் நீராடினார். ஆனால் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசவில்லை. இளைஞர்கள் ஏன் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள். இளைஞர்கள் ஏன் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.