மோடி அரசின் செயலற்ற தன்மையால் ஆபத்தில் அண்டை நாடுகள்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 
ராகுல் காந்தி

மோடி அரசு முதலில் நமது நிலத்தை ஒப்படைத்து விட்டு இப்போது சீனாவை பின்னுக்கு தள்ளும் செயலற்ற தன்மையால் நமது நெருங்கிய அண்டை நாடுகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

பூடானில் சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் சீனா கிராமங்களை நிர்மாணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கிராமங்களை குடிமக்கள் மற்றும் ராணுவத்துக்காகவும் சீனா பயன்படுத்த வாய்ப்புள்ளது.  சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. அதேசமயம் இந்த கட்டுமானங்கள் உள்ளூர் மக்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவே என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, சீனாவை மோடி அரசு கையாளும் விதத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.மேலும், இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து தனது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். தற்போது சீனா கிராமங்களை நிர்மாணித்து வருவது தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.

சீனா

தற்போது பூடானில் சீனா கிராமங்களை நிர்மாணித்து வருவது குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில், மோடி அரசு முதலில் நமது நிலத்தை ஒப்படைத்து விட்டு இப்போது சீனாவை பின்னுக்கு தள்ளும் செயலற்ற தன்மையால் நமது நெருங்கிய அண்டை நாடுகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால், உங்கள் நண்பர்களுக்காக எப்படி நீற்பீர்கள்? என்று பதிவு செய்து இருந்தார்.