அரசு இருந்தால் உங்கள் கடமையை செய்யுங்கள்.. மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி
அருணாசல பிரதேச சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில், அரசு இருந்தால் உங்கள் கடமையை செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.
அருணாசல பிரதேசம் மேல் சியாங் மாவட்டத்தின் ஜிடோ கிராமத்தில் வசிக்கும் மிரன் தரோன் கடந்த 20ம் தேதியன்று இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதியில் வேட்டையாட சென்ற போது சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், மிரன் தரோனை பற்றிய தகவல் அறியவும் அவரை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் சீன ராணுவத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில், மிரன் தரோன் விவகாரத்தில் மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், அரசு இருந்தால் உங்கள் கடமையை செய்யுங்கள். மிரன் தரோனை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று பதிவு செய்து இருந்தார். மேலும் Bring back #MiramTaron! என்ற ஹேஷ்டேக்கும் பதிவு செய்து இருந்தார்.
முன்னதாக ராகுல் காந்தி டிவிட்டரில் மற்றொரு டிவிட்டில், ஒரு கிராப்பை பதிவேற்றம் செய்து, இருவருக்கு மட்டுமே வளர்ச்சி நிரம்பி வழிகிறது. நமது 4 கோடி சகோதர, சகோதரிகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த 4 கோடியில் ஒவ்வொருவரும் ஒரு உண்மையான நபர், வெறும் எண் அல்ல. இந்த 4 கோடியில் ஒவ்வொருவரும் சிறந்தவர்கள். இந்த 4 கோடியில் ஒவ்வொன்றும் இந்தியா என்று பதிவு செய்துள்ளார்.