போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு,வேலை வழங்க வேண்டும்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்

 
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த  விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, வேலை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைகள் வழங்கப்பட வெண்டும் என்று நான் விரும்புகிறேன். பஞ்சாப் அரசு சுமார் 400 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியது நமக்கு தெரியும், அவர்களில் 152 பேருக்கு வேலையும் வழங்கியுள்ளது. என்னிடம் பட்டியல் உள்ளது. 

ராகுல் காந்தி

ஹரியானாவிலிருந்து 70 விவசாயிகளின் மற்றொரு பட்டியலை நாங்கள் செய்துள்ளோம். ஆனால் உங்கள் அரசாங்கம் அவர்களின் பெயர்கள் இல்லை என்று சொல்கிறது. விவசாயிகள் போராட்டத்தில் சுமார் 700 விவசாயிகள் இறந்தனர். பிரதமர் தேசத்திடமும், விவசாயிகளிடமும் மன்னிப்பு கேட்டார். அவர் தவறு செய்ததை ஏற்றுக்கொண்டார். கடந்த நவம்பர் 30ம் தேதியன்று மத்திய வேளாண் துறை அமைச்சரிடம் (நரேந்திர சிங் தோமர்) போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் இறந்தனர்? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நரேந்திர சிங் தோமர் தன்னிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லை என்று கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நரேந்திர சிங் தோமர்

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3  வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒராண்டுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 700 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.