ஒரே நாளில் காங்கிரஸூக்கு இரண்டு அடி.. கட்சியிலிருந்து வெளியேறிய அதிதி சிங், பா.ஜ.க.வில் இணைந்த பிரியங்கா மவுரியா

 
அதிதி சிங்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங் அந்த கட்சியிலிருந்து விலகினார். பிரியங்கா மவுரியா பா.ஜ.க.வில் இணைந்தார்.

உத்தர பிரதேசத்தில் ரேபரேலி சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங். இவர் 5 முறை எம்.எல்,ஏ.வாக இருந்த மறைந்த பிரதாப் சிங்கின் மகள். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு வரவேற்பு தெரிவித்தது போன்ற காரணங்களால் இவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே புகைச்சல் இருந்து வந்தது. மேலும், அதிதி சிங் தொடர்ந்து காங்கிரஸின் தவறுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார்.

காங்கிரஸ்

இதனால் இவர் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜக.வில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறாமல் இருந்தார். இருப்பினும் அவர் பா.ஜ.க.வுக்கு செல்வார் என்று நீண்ட கால எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது அது நடக்கும் போல் தெரிகிறது. ஏனென்றால் அதிதி சிங் நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸிலிருந்து விலகுவதாக அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அதிதி சிங் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரியங்கா மவுரியா

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸின் நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்  என்ற பிரச்சாரத்தின் முகமாக அறியப்பட்ட பிரியங்கா மவுரியா நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். அதிதி சிங் காங்கிரஸிலிருந்து விலகியது, பிரியங்கா மவுரியா பா.ஜ.க.வில் இணைந்தது போன்ற நிகழ்வுகள் காங்கிரசுக்கு எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.