போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி - புஸ்ஸி ஆனந்த்
எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்ய கூடாது என்று சொல்லக்கூடிய தலைவர் தளபதி ஒருவர் மட்டும் தான் என தவெக கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி எல்லம்மாள். ஆதரவற்ற இவர் குடியிருக்க வீடு இல்லாமல் மிகுந்த சிரமம் அடைந்து வந்துள்ளார். இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமையின் உத்தரவின்படி ஒன்றிய செயலாளர் வினோத் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து மூதாட்டி எல்லம்மாளுக்கு புதிய கான்கிரீட் வீடு ஓன்றை கட்டி கொடுத்தனர். புதிய வீட்டின் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாகரல் கிராமத்திற்கு நேரில் வந்து தளபதி விலையில்லா வீடு திட்டம் எனும் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த புதிய வீட்டை,ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி பூஜை செய்து ஆதரவற்ற மூதாட்டி எல்லம்மாளிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்பிகே. தென்னரசு மற்றும் நிர்வாகிகளும், தொண்டர்களும்,கிராம மக்களும் கலந்து கொண்டு வீட்டை கட்டிக் கொடுத்த ஒன்றிய நிர்வாகிகளுக்கு ஆரவார கோஷமிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வறுமையில் வாடும் கிராம மக்களுக்கு த.வெ.க.கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். பின்பு தொண்டர்களிடையே பேசிய தவெக கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “ முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், அடுத்தபடியாக தொழிலை பார்க்க வேண்டும், அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை தான் ஒரு சதவீதம், இரு சதவீதம்,மக்களுக்கு செலவு செய்ய வேண்டும், எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்ய கூடாது என்று சொல்லக்கூடிய தலைவன் தளபதி ஒருவர் மட்டும் தான். நம்முடைய இலக்கு, தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இலக்கு 2026-இல் தளபதியை அமர வைக்க வேண்டும் என்பது ஒன்று மட்டும் தான். அதற்கு நீங்கள் எல்லோரும் உழைக்க வேண்டும். மக்களோடு மக்களாக நீங்கள் மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து சேவை செய்ய வேண்டும்.
பல்வேறு கட்சிகளிலிருந்து வரும் நண்பர்கள் எல்லாம் நாம் மதிக்க வேண்டும், அரவணைக்க வேண்டும், அவர்களோடு நாமும் நம்மோடு அவர்களும் செயல்பட வேண்டும். ஆனால் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன், தலைவர் தளபதி சொல்கிறதெல்லாம் யார் அன்று முதல் இன்று வரை சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டிய தொண்டருக்கு தான் பதவி வழங்கப்படும்... யார் உழைத்தார்களோ அவர்களுக்கு மட்டும்தான் பதவி, உழைக்காதவர்கள் யாருக்கும் கட்சியின் பதவி கொடுக்கப்படாது. நமக்கு எல்லாமே தளபதி தான்! தளபதியை தாண்டி, வேறு எதுவும் கிடையாது அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்! எல்லோரும் புதிதாக வருவார்கள், எல்லாரும் சொல்லுவார்கள், யார் பேச்சையும் எதையும் கேட்காதீர்கள்... உங்களுக்கு வேண்டியது தளபதி தலைவர் மட்டும்தான்” என்றார்.