கேப்டன் அமரீந்தர் சிங் திமிர்பிடித்த ராஜா.. நவ்ஜோத் சிங் சித்து ஆவேசம்

 
நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் ஒரு திமிர்பிடித்த ராஜா என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் தெரிவித்தார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கடந்த நவம்பர் 2ம் தேதியன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். முன்னதாக கடந்த ஏப்ரலில் கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரசில் இருந்தபோது,  தற்போதைய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து குறித்து பேசுகையில், சித்துவுக்காக என் கதவுகளை மூடிவிட்டேன் என்று தெரிவித்தார். ஏனென்றால் அந்த நேரத்தில் நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மி கட்சியில் சேர உள்ளதாக வதந்தி நிலவியது.

கேப்டன் அமரீந்தர் சிங்

கேப்டன் அமரீந்தர் சிங் தற்போது பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியுள்ளாா. எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளார். இந்த சூழ்நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் முன்பு கதவுகளை மூடி விட்டதாக கூறியதற்கு, நவ்ஜோத் சிங் சித்து தற்போது அவரை மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

மோடி

சண்டிகரில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து பேசுகையில், கேப்டன் அமரீந்தர் சிங் திமிர்பிடித்த ராஜா. கேப்டன் அன்று சித்துவுக்கு கதவுகள் மூடப்பட்டு விட்டன என்று கூறினார். ஆனால் இன்று பாருங்கள்.  அவர் வீட்டில் அமர்ந்து மோடியின் கால்களை நக்குகிறார் என்று தெரிவித்தார். சித்துவின் இந்த பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.