“பிடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி கொள்ளுங்கள் அண்ணாமலை!”
மத்திய அரசு மற்றும் அமைச்சர் எல்.முருகன் மீது ஏற்பட்ட பிரச்சனையால் அண்ணாமலை மத்திய அரசிற்கு எதிராக போராடி வருகிறார் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தனியார் ஓட்டலில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை பெட்ரோல், டீசல் விலை குறைக்க போராட்டம் நடத்துவது காமெடியாக உள்ளது. எரிப்பொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்பது குழந்தைகளுக்கும் தெரியும். மத்திய அரசின் ஆட்சியாளர்கள், இணை அமைச்சர் முருகன் மீதான ஏதோ பிரச்சனையால் மத்திய அரசிற்கு எதிராக அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.
செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களை 200, 400,1000 ரூபாய் என பிச்சை கேட்க வந்தவர்களை போல நடத்துவதா? மோடியை பிரதமராக்கியது மக்கள் என்றாலும் முக்கிய காரணமாக திகழ்ந்தது வடமாநில ஊடகங்கள் தான், இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயலலிதா, கலைஞர், எம்ஜிஆர் பத்திரிகையாளர்களை மதித்தனர் ஏன்? தமிழிசை, முருகன் போன்றோரும் கண்ணியம் காத்தனர். மனிதனை மனிதனாக மதிக்க பெரியார், அம்பேத்கார், அண்ணா,கலைஞர் வரலாற்றை படிக்க வேண்டும். அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி கொள்ளுங்கள்” எனக் கூறினார்.