"மாற்றுக் கட்சிக்கு நூல் விடும் காங்கிரசார் தேவை இல்லை"- நாராயணசாமி காட்டம்

நீங்கள் கட்சிக்கே வேண்டாம், காங்கிரசில் உறுதியாக இல்லாதவர்கள் மாற்று கட்சிக்கு போய் சேருங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்ட புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், “பெருமழையால் பாதிக்கப்பட்ட புதுவையை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கவில்லை. முதல் அமைச்சரிடம் பாதிப்பு குறித்து பிரதமர் கேட்கவும் இல்லை. பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் மெத்தனமாக இருக்கக் கூடாது. பாராளுமன்ற பிரச்னையில் வேறு, சட்டமன்ற பிரச்னைகள் வேறு. யார் வேட்பாளராக வருவார்கள் என்பதை கூற முடியாது. எந்த ரூபத்தில் வருவார்கள் என கூற முடியாது. நாம் மக்களை நம்பி இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து கட்சித் தொண்டர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சிலர் இங்கும், அங்கும் தொடர்பில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியிலே இருந்து கொண்டு மாற்று கட்சிக்கு நூல் விட்டு பார்க்கின்றனர்.
அவற்றையெல்லாம் இன்றோடு விட்டுவிட வேண்டும். ஒரு கட்சியில் இருந்தால் அதில் உறுதியாக இருங்கள். இல்லையென்றால் நீங்கள் கட்சிக்கே வேண்டாம். எங்கு போக வேண்டுமோ, அங்கு போய் சேருங்கள். கட்சிக்கு உண்மையான 3 பேரை வைத்து ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் கட்சிக்குள் இருந்து கொண்டு உள் வேலை செய்யும் ஆயிரம் பேரை வைத்து கொண்டு கட்சியை நடத்த முடியாது. வருங்காலம் காங்கிரஸ் கட்சியின் காலம். பிரதமராக ராகுல் காந்தி வருவது நிச்சயம். புதுவையில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும்” என்றார்.