அயோத்தி நில மோசடி குறித்து யோகி அரசின் விசாரணை உத்தரவு.. வெறும் கண் துடைப்பு .. பிரியங்கா காந்தி

 
பிரியங்கா காந்தி

அயோத்தி ராமர் கோயில் அருகே பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்டோர் நிலங்களை அபகரித்ததாக வெளியான செய்தி குறித்து உ.பி. அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது வெறும் கண் துடைப்பு என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் அருகே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், கமிஷனரின் உறவினர்கள், எஸ்.டி.எம். மற்றும் டி.ஐ.ஜி உள்ளிட்டோர் வலுக்கட்டாயமாக அல்லது சட்டவிரோதமாக வாங்கியதாக செய்திகள் வெளியானது. இது உத்தர பிரதேசத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இது வெறும் கண்துடைப்பு என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராமர் கோயில் (மாதிரி படம்)

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதால், அது (உச்ச நீதிமன்றம்) தானாக முன்வந்து இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். பகவான் ராமர் நேர்மையின் சின்னம். பா.ஜ.க. ஆதரவு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கோயில் கட்டும் நம்பிக்கையில் இருந்து லாபம் அடைந்துள்ளனர். ஆளும் பா.ஜ.க. கட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கின்றனர், மக்களின் நம்பிக்கையை புண்படுத்துகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயில் கட்டப்பட்டு வருகிறது, மாவட்ட அளவிலான அதிகாரிகள் தலைவர்களுக்கு எதிராக விசாரிக்க முடியாது என்பதால் நீதிமன்றத்தால் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும். மாவட்ட அதிகாரிகளின் விசாரணை கண்துடைப்பாக உள்ளது.

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

விற்பனை பத்திரங்களில் ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர்களின் கையெழுத்து உள்ளது. அறக்கட்டளை செயலாளரான சம்பத் ராய்க்கு இந்த மோசடி தெரிந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரும், அறக்கட்டளை உறுப்பினருமான அனில் மிஸ்ரா மற்றும் அயோத்தியின் மேயரான ரிஷிகேஷ் உபாத்யாய் ஆகியோர் விற்பனை பத்திரங்களில் சாட்சிகளாக உள்ளனர். அறக்கட்டளையின் பணம் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.