ஆட்சேர்ப்பில் ஊழல், கேள்வித்தாள் லீக் ஆகியவை பா.ஜ.க. அரசின் அடையாளமாகி விட்டன... பிரியங்கா காந்தி

 
பிரியங்கா காந்தி பிரியங்கா காந்தி

ஆட்சேர்ப்பில் ஊழல், கேள்வித்தாள் லீக் ஆகியவை பா.ஜ.க. அரசின் அடையாளமாகி விட்டன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் நேற்று உத்தர பிரதேச ஆசிரியர் தகுதி தேர்வு (UPTET)நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் அந்த தேர்வுக்கான கேள்வித்தாள் லீக்கானதாக தகவல் வெளியானது. இதனையடுத்து உத்தர பிரதேச ஆசிரியர் தகுதி தேர்வு தொடங்குதவற்கு சிறிது நேரத்து முன்பு அந்த தேர்வு  ரத்து செய்யப்பட்டதாக சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஜெனரல் பிரசாந்த் குமார் அறிவித்தார்.

உத்தர பிரதேச ஆசிரியர் தகுதி தேர்வு

இதனால் இந்த தேர்வு எழுத இருந்த சுமார் 20 லட்சம்  பேர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில் அம்மாநில பா.ஜ.க. அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரியங்கா காந்தி டிவிட்டரில், ஆட்சேர்ப்பில் ஊழல், கேள்வித்தாள் லீக் ஆகியவை பா.ஜ.க. அரசின் அடையாளமாகி விட்டன. இன்று உத்தர பிரதேச ஆசிரியர் தகுதி தேர்வு கேள்வித்தாள் லீக்கானதால் லட்சக்கணக்கான இளைஞர்களின் கடின உழைப்பு நாசமானது.

பா.ஜ.க.

ஒவ்வொரு முறை கேள்வித்தாள் லீக்காகும் போதும், யோகி ஆதித்யநாத் ஜியின் அரசு ஊழலில் ஈடுபட்ட பெரிய மீன்களை காப்பாற்றியுள்ளது. அதனால்தான் மாநிலத்தில்  ஊழல் உச்சத்தில் உள்ளது என்று பதிவு செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் உத்தர பிரதேச தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.