பாதுகாப்பு குறைபாடு எதிரொலி.. பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து.. காங்கிரஸ் அரசை கடுமையாக சாடிய பா.ஜக.

 
சாலையில் 20 நிமிடங்கள் நின்ற மோடி  வாகனம்

பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அம்மாநில ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை பா.ஜ.க. தலைவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். மேலும் முன்னதாக தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் பிரதமர் மோடியின் வாகனம் ஹூசைனி வாலாவிருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி செல்லும் வாகனம் சுமார் 20 நிமிடங்கள் சாலையிலேயே நகர முடியாமல் நின்றது. இதனையடுத்து பஞ்சாப் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு பிரதமர் மீ்ண்டும் டெல்லி திரும்பினார்.

ஜே.பி. நட்டா

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்தது தொடர்பாக பஞ்சாப் அரசை பா.ஜ.க. கடுமையாக சாடியுள்ளது. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டிவிட்டரில், மிகவும் கவலையான விஷயம் என்னவென்றால், பிரதமரை பொருத்தவரையில் இந்த சம்பவம் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடாக இருந்தது. போராட்டக்காரர்களுக்கு பிரதமர் வரும் வழியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரத்தில் பஞ்சாப் சி.எஸ். மற்றும் டி.ஜி.பி. வழி தெளிவாக இருப்பதாக எஸ்.பி.ஜி.க்கு உறுதி அளித்தனர்.  பஞ்சாபுக்கான ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்குவதற்கான பிரதமரின் வருகை சீர் குலைந்தது வருத்தமளிக்கிறது. இது போன்ற மலிவான மனநிலை பஞ்சாபின் வளர்ச்சியை தடுக்க விட மாட்டோம். பஞ்சாபின் வளர்ச்சிக்கான முயற்சியை தொடருவோம். 

காங்கிரஸ்

வாக்காளர்களின் கைகளில் மிகப்பெரிய தோல்விக்கு பயந்து பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம், மாநிலத்தில் பிரதமர் மோடியின் ஜியின் திட்டங்களை தடுக்க அனைத்து தந்திரங்களையும் முயற்சித்தது. பகத் சிங் மற்றும் பிற தியாகிகளுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த வேண்டும், முக்கிய வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்பது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு தங்களின் மலிவான செயல்களால், அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பதையும், சுதந்திர போராட்ட வீரர்களை மதிக்கவில்லை என்பதையும் காட்டியுள்ளது. நிலையை மோசமாக்கும் வகையில், முதல்வர் சன்னி இந்த விஷயத்தை பேசவோ அல்லது அதை தீர்க்கவோ தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள மறுத்து விட்டார். பஞ்சாபில் காங்கிரஸ் அரசு கையாண்ட உத்திகள் ஜனநாயக கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட எவருக்கும் வலியை ஏற்படுத்தும். கூட்டத்துக்கு மக்கள் வருவதை தடுக்க மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,  போலீசாரின் உயர்மட்டம், போராட்டக்காரர்களுடன் ஒத்துழைப்பதால் ஏராளமான பேருந்துகள் சிக்கி தவித்தன என பதிவு செய்துள்ளார்.