பாஜக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது- பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்

 
premalatha vijayakanth

வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என்ற பாஜகவின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது, எந்தத் தேர்தலாக இருந்தாலும் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்- Dinamani

திண்டுக்கல்லில் இன்று தேமுதிக கட்சியின் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திருமண நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக  வருகை தந்த  தேமுதிகவின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “தமிழக முழுவதும் காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேமுதிகவை பொருத்தவரை மது இல்லாத, போதை இல்லாத, கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என மாவட்டம் முழுவதும் உறுதிமொழி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் கஞ்சா விற்பனை மது விற்பனை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக கூடிய சூழ்நிலை தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. இது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு விஷயம். பெட்ரோல் கொண்டுவீச்சில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சனை இன்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு இலக்காவை வைத்திருப்பவர் தமிழக முதல்வர். ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் மனித சங்கிலி போராட்டம் இதன் காரணமாக சட்ட ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த இரண்டிற்கும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது இதனை தேமுதிக வரவேற்கின்றது. ஏனென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனித கடமையாகும். 

மனித சங்கிலி போராட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என விடுதலை சிறுத்தைகள் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக அவர்கள் எங்களை அழைக்கவும் இல்லை, தகவல் தெரிவிக்கவும் இல்லை. அழைக்காத காரணத்தினால் இதில் நாங்கள் பங்கேற்க போவதில்லை. தமிழக அமைச்சர்கள் அனைவருமே ஆட்சிக்கு வருவதற்கு  முன்பு ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்ததுக்கு பின்பு ஒரு பேச்சும் பேசி வருகின்றனர். அமைச்சர்கள்  இரட்டை நிலை பாட்டை எடுத்துள்ளனர். தமிழக மக்களின் சார்பில் இது வன்மையாக கண்டிக்கின்றேன்.  பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் நடைபெற உள்ள 2024  பாராளுமன்ற தேர்தலின் போது சட்டமன்றத்திற்கும்  சேர்த்து தேர்தல் வரும் என கூறி வருகின்றனர். தேமுதிகவை பொறுத்தவரை நேர்மையான தேர்தலை தான் நாங்கள் எதிர் கொள்வோம் நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு.

தேமுதிகவை பொறுத்தவரை பாரதிய ஜனதாகட்சியோ அதிமுகவுடனோ கூட்டணி கிடையாது. யாருடனும் தற்பொழுது வரை கூட்டணியில் கிடையாது. பெட்ரோல் குண்டு வீச்சை பொறுத்தவரை தமிழக முதல்வர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. இதற்கு அவர் அவசியம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். மதுவிலக்குக்கு எதிராக தமிழக முழுவதும் தேமுதிக சார்பாக போராட்டம் நடத்தப்படும். மேலும் மக்கள் பிரச்சினை தொடர்பாகவும் தேமுதிக போராட்டம் நடத்தும்” என தெரிவித்தார்.