இன்று மன்னிப்பு கேட்டால் கூட நாங்கள் அவர்களின் இடைநீக்கத்தை திரும்ப பெற தயாராக இருக்கிறோம்.. மத்திய அமைச்சர்

 
பிரகலாத் ஜோஷி

இன்று மன்னிப்பு கேட்டால் கூட நாங்கள் அவர்களின் இடைநீக்கத்தை திரும்ப பெற தயாராக இருக்கிறோம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி  தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஒழுங்கீனமான நடந்த கொண்ட எம்.பி.க்கள் ரிபுன் போரா, பிரியங்கா சதுர்வேதி, பினோய் விஸ்வம் உள்பட மொத்தம் 12 எம்.பி.க்கள்  இந்த கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இடை நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நாடாளுமன்றம்

இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.  நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார், சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் ஆகியோர் சிறிது நேரம் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள்
அதேசமயம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் இன்று மன்னிப்பு கேட்டால் கூட இடைநீக்கத்தை திரும்ப பெற தயார் மத்திய அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  அவர்கள் (சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள்)  ஏன் இடைநீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது என்பதை நாங்கள் விளக்கினோம். என்ன நடந்ததோ நாடு நேரில் பார்த்தது. இது பதிவில் உள்ளது. இன்று அவர்கள் மன்னிப்பு கேட்டால் கூட நாங்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.