தேசிய தலைவராக விரும்பும் மம்தா பானர்ஜி... கர்நாடகாவில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆள் பிடிக்கும் பிரசாந்த் கிஷோர்?..
கர்நாடகாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில், முக்கிய காங்கிரஸ் தலைவர்களை திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் இழுக்கும் முயற்சியில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3வது முறையாக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது தாங்கள் மாநில கட்சி என்ற அளவில் நின்று விடாமல் தேசிய கட்சியாக உருவெடுக்க மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கான வேலைகளிலும் இறங்கி விட்டது. திரிபுரா, கோவா என பல மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தடம் பதிக்க தொடங்கியுள்ளது. தற்போது கர்நாடகாவில் அதற்கான வேலைகளை அந்த கட்சி தொடங்கியுள்ளது.

கர்நாடகாவில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளதாக தகவல். பிரசாந்த் கிஷோர் தற்போது பெங்களூருவில் முகாமிட்டுள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து திரிணாமுல் காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல். இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது: பிரசாந்த் கிஷோரிடம் அவர் சந்திக்க விரும்பும் பட்டியல் உள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் சேர விருப்பமா என்று கேட்க எம்.பி. பாட்டீலை சந்திக்க பிரசாந்த் கிஷோர் வந்துள்ளார்.

ஆனால் பாட்டீல் அவரை சந்திக்கவில்லை. இருப்பினும் அவர்கள் இருவரும் தொலைப்பேசியில் பேசியுள்ளனர். எம்.பி. பாட்டீலுக்கு லிங்காயத் சமூகத்தின் வலுவான ஆதரவு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதனால் பாட்டீலை திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் இழுத்தால் அந்த கட்சிக்கு கர்நாடகாவில் வலுவான அடித்தளம் போட வசதியாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டே கர்நாடகாவில் திரிணாமுல் காங்கிரஸை பாட்டீல் வழிநடத்த வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் விரும்புகிறார். இருப்பினும் பாட்டீல் தீவிர காங்கிரஸ் விசுவாசி என்பதால் பிரசாந்த் கிஷோரின் அளித்த வாய்ப்பை மறுத்து விட்டார் என்று தகவல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


