உடையும் அதிமுக கூட்டணி... பாமகவை நெருங்கும் தவெக! திமுக பக்கம் சாயும் தேமுதிக

 
s s

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கூட்டணிகள், வியூகங்கள், பிரச்சாரங்கள் - இவை அனைத்தும் வேகமாக முன்னேறி வருகின்றன. எந்த புதிய கட்சிகளும் சேராத நிலையிலும் வலுவான வெற்றிக் கூட்டணியாக திகழும் திமுக கூட்டணி, தேர்தல் முன்னெடுப்புகளை படுவேகமாக நகர்த்தி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கருதும் எதிர் தரப்பான அதிமுக, பாஜக உடன் மட்டும் கூட்டணியை திடீரென உறுதி செய்து வைத்திருக்கிறது. மற்றபடி கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. 

அதிமுகவின் கூட்டணியில் தேமுதிக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினாலும், தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் பிடிகொடுத்து பேசவில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யவில்லை. ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாநாட்டில்தான் தெளிவுபடுத்தப்படும் என அதிரடியாக கூறிவிட்டார். இதேபோல்தான் பாமகவும் நாங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். 

இதுபோன்ற அரசியல் குழப்பமான சூழ்நிலைகளில் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருக்கும் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் இந்த மாதம் நடைபெறுகிறது. இந்த ஆறு இடங்களில் நான்கு இடங்கள் திமுகவுக்கும் இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும். தேர்தல் அறிவிப்பு வெளிவந்த உடனேயே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது திமுக. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு ஒரு இடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள மூன்று இடங்களை திமுகவும் எடுத்துக் கொண்டது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. இது அக்கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் அதிமுகவில் அந்த இரண்டு இடங்களில் யார் போட்டியிடுவார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இரண்டு இடங்களிலும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார். இங்குதான் அவரது நடவடிக்கை குறித்து விமர்சிக்கப்படுகிறது.

DMK Lok Sabha Election 2024 Alliance Seats Sharing EXCLUSIVE திமுக  கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள்? உறுதியான இறுதிவடிவம்! காங்கிரஸுக்கு  சறுக்கல்!

தங்களுக்கு ராஜ்யசபா சீட் வேண்டுமென தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் அடுத்த ஆண்டு தருவதாக கூறி கைகழுவி விட்டார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில், அதிமுக ஆதரவுடன் முன்பு ராஜ்யசபா சென்றிருந்த அன்புமணி ராமதாஸுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை.பாமகவில் அன்புமணி ராமதாஸ், தேமுதிகவில் சுதீஷ் அல்லது விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா இடங்களை மனமுவந்து கொடுத்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு யோகமாக அமைந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். காரணம், கூட்டணி இன்னும் தெளிவுபடுத்தப்படாத நிலையில் ராஜ்யசபா சீட்களின் மூலம் இரு கட்சிகளையும் தங்களது கூட்டணியில் இருப்பதாக அறிவித்து, சட்டப்பேரவை தேர்தல் களத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வசதியாக இருந்திருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, அதனை செய்ய தவறிவிட்டார்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி இடம் பெற்றிருந்த தேமுதிக 2.59% வாக்குகளை பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக 4.31% வாக்குகளை பெற்றது. அதிமுக 20.46%, பாஜக 11.24% வாக்குளை பெற்றது. ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் தேமுதிக, திமுக முகாமை நெருங்கி செல்கிறது. மதுரை திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதற்கு பிரேமலதா நன்றி தெரிவித்தார். அப்போது அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி தேர்தல் அரசியல் செய்வதால் தேமுதிகவும் அதையே செய்வதாக கூறி, கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை. மற்றொரு புறத்தில் எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிருப்தியில் உள்ள பாமகவை வளைத்துப் போட நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளை செய்யுமாறு நிர்வாகிகளை விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. அதே சமயம், ராமதாஸ் - அன்புமணி மோதல் போக்கை வைத்து, ராமதாஸ் பாமகவை நம்முடன் வைத்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவெல்லாம் ஆளும் கட்சியான திமுகவுக்கே கைகொடுக்கும் என்றே பார்க்கப்படுகிறது. இதற்கு கடந்த மக்களவைத் தேர்தல் ஒரு முக்கிய உதாரணம். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால் ஆளும் கட்சி வெற்றி பெற்றது. ராஜ்யசபா தேர்தல் இரண்டு வாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது வியூகத்தை மாற்றி அமைத்தாரானால், சட்டப்பேரவைத் தேர்தலில் இது அவருக்கு சாதகமாக அமையும்.