"நடக்கின்ற பிரச்சனைக்கு திமுக தான் வில்லன்..."- அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

 
அன்புமணி அன்புமணி

பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

anbumani

 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும்,  கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே  உட்கட்சி மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இருவரும் மாறி, மாறி  நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் காரணமாக பாமகவில் நிகழும் மாற்றங்களும், மோதல்களும் பெரும் பேசுபொருளாகியுள்ளன.  ராமதாஸ், தமிழகம் முழுவதும்  ஒழுங்காக செயல்படாத மற்றும்  பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்த நியமனம் செய்து வருகிறார். அதன்படி இதுவரை 60-க்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.  அந்தவகையில் 60 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 39 மாவட்ட தலைவர்களை அவர் மாற்றியுள்ளார்.  

மன்னிச்சிடுங்க ஐயா.. என்ன செய்யனும்னு சொல்லுங்க.. பாமக தலைவனாக நான் செய்கிறேன் - அன்புமணி.. 

இந்நிலையில் பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன். பாமகவை பலவீனப்படுத்துவதே திமுகவின் திட்டமாக உள்ளது, பாமக மாநாட்டின் கூட்டத்தை பார்த்து முதல்வருக்கு பயம் வந்துவிட்டது. ஆகையால் பாமகவில் உள்ள சூழ்ச்சியாளர்களை பயன்படுத்தி திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் நம்ப வைத்து துரோகம் செய்தது. இந்த பிரச்சனைக்கு நானோ, ஐயாவோ காரணம் கிடையாது. ஒரு சிலர் நம் கட்சியிலேயே திமுகவின் சூழ்ச்சிக்கு துணை போகிறார்கள். அது யார் யார் என்பது விரைவில் தெரியவரும், திமுகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது, அதனை உடைத்து எறிவோம்” என்றார்.