ராமதாஸ் கேட்ட கேள்வியில் என்ன தவறு இருக்கு..? ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்- அன்புமணி
ராமதாஸ்க்கு வேறு வேலையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை ஏற்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை ஏற்க முடியாது. இதற்காக முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். ராமதாஸ் குறித்து முதல்வர் ஆணவத்துடன் பேசியது கண்டிக்கதக்கது. ஆணவத்துடன் பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல. மருத்துவர் அய்யா இல்லையென்றால் 2006இல் திமுக ஆட்சியும் இருந்திருக்காது. நீங்கள் முதன் முதலில் அனுபவித்த துணை முதல்வர் பதவியும் கிடைத்திருக்காது. ராமதாஸ் கொடுத்த ஆதரவால்தான் 2006ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சரானார். ராமதாஸ் கேட்டுக்கொண்டதால் தான் ஸ்டாலின் துணை முதலமைச்சராக முடிந்தது. ராமதாஸ் கைகாட்டியதால் தான் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் விளைந்த ஒரு நன்மையைக் கூற முடியுமா?
அதானியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏன் என ராமதாஸ் கேட்ட கேள்வி நியாயமானது. அதற்கு ராமதாஸ்க்கு வேறு வேலையில்லை என எங்களை அவமானப்படுத்திவிட்டீர்கள். முறையாக கேள்விக்கு பதில் அளிக்காமல் இழிவுப்படுத்தும் வகையில் பதில் கூறுவதா? முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் தொண்டர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது” என எச்சரித்தார்.