12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம்.. மாவட்ட மறுவரையறை ஆணையம் அமைக்க வேண்டும் - முதல்வருக்கு அன்புமணி கடிதம்..
தமிழகத்தில் மாவட்ட மறுவரையறை ஆணையம் அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்ட மறுவரையறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், “ தமிழகத்தில் கடந்த ஆட்சியில் காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்கள் 11 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சிறந்த நிர்வாகமே மேம்பாட்டு நடவடிக்கையை என்பதில் ஐயமில்லை. ஆனால் இதில் நிகழ்ந்த சிறு தவறுகளால் எல்லை மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சில சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள் , ஏற்கனவே இருந்த மாவட்டங்கள் வருவாய் கோட்ட அளவிற்கு பரந்து கிடக்கின்றன. உதாரணமாக உளுந்தூர்பேட்டை தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வந்தாலும், அதன் எல்லைப்பகுதிகள் விழுப்புரம் மாவட்ட வருவாய் அளவில் அடங்கும்.
இதே போல் இன்னும் பல சட்டப்பேரவை தொகுதிகள் மாவட்ட எல்லைகளை கடந்து பரந்து விரிந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த நிதியை இரு மாவட்ட ஆட்சியர்களின் மூலமாக செலவழிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதனால் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ள தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது அங்கு 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. தற்போது புதிதாக 23 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருக்கிறது. மாவட்டங்களின் சராசரி மக்கள் தொகை 11 லட்சம் மட்டும்தான்.
இதேபோல் தமிழகத்திலும் 12 லட்சம் அல்லது அதற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 8 மட்டுமே. தமிழ்நாட்டில் 25 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட 8 மாநிலங்களில் உள்ளன. இன்றைய அளவில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டம் திருவள்ளூர் அதன் மொத்த மக்கள் தொகை 35 லட்சம். இதுபோல் மாவட்டத்தின் மக்கள்தொகை அதிகமாக இருக்கும்போது அந்த மாவட்டங்களில் சிறந்த நிர்வாகமும் வளர்ச்சியும் சாத்தியமாகாது. எனவே தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் அனைத்து மாவட்டங்களையும் மறுசீரமைக்க முன்வர வேண்டும் அவ்வாறு மாவட்ட எல்லைகளை மறு சீரமைக்கப்படும் போது சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள் மாவட்ட எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். “ என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.