திரிபுராவை வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயிலாக மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது... பிரதமர் மோடி

 
பிரதமர் மோடி, பிப்லாப் குமார் தேப்

திரிபுராவை வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயிலாக மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

திரிபுராவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். அம்மாநிலத்தில் அகர்தலாவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில் ரூ.450 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் அம்மாநில முதல்வர் பில்லாப் குமார் தேப், விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் கூறியதாவது:  கடந்த அரசாங்கத்துக்கு மாநிலத்தை பற்றிய தொலைநோக்குப் பாா்வை இல்லை. 

மோடி கூட்டத்தில் குவிந்த மக்கள்
திரிபுராவில் HIRA (H-நெடுஞ்சாலை, I-இன்டர்நெட் வே, R-ரயில்வே,  A-விமான நிலையம்) மாதிரி வளர்ச்சிக்கு நான் உறுதியளித்திருந்தேன். திரிபுராவை வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயிலாக மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. கிசான் ரயில் மூலம் திரிபுரா நாடு முழுவதும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக திரிபுராவும் முக்கிய பங்காற்ற முடியும். மூங்கில் பொருட்களுக்கு நாட்டில் மிகப்பெரிய  சந்தை உருவாகி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிப்லாப் குமார் தேப்

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் டிவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையிலான இரட்டை எந்திர அரசாங்கம் திரிபுராவின் வளர்ச்சிக்கான வழிகளை திறந்து வைத்துள்ளது. மேலும் மாநில மக்கள் அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தர் மைதானத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என பதிவு செய்துள்ளார்.