பசுவை கேலி செய்பவர்கள், 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் அவற்றால் நடக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.. மோடி
பசு மற்றும் எருமைகளை கேலி செய்பவர்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளால் நடக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது மக்களவை தொகுதியான வாரணாசியில் ரூ.870 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: நாட்டின் பால் துறையை வலுப்படுத்துவது எங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். பசு மற்றும் கோவர்தன் பற்றி பேசுவது சிலரால் குற்றமாகி விட்டது. பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம், ஆனால் பசு நமக்கு தாயாக போற்றப்படுகிறது.

பசு மற்றும் எருமைகளை கேலி செய்பவர்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளால் நடக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். கடந்த 6-7 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பால் உற்பத்தியை விட, தற்போது நாட்டில் பால் உற்பத்தி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக பால் உற்பத்தியில் இந்தியா 22 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. உத்தர பிரதேசம் நாட்டிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலம் மட்டுமல்ல, பால் துறையின் விரிவாக்கத்திலும் முன்னணியில் உள்ளது. நாட்டின் வெண்மை புரட்சியில் பால் வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு துறையில் புதிய ஆற்றல் விவசாயிகளின் நிலையை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கால்நடை வளர்ப்பு நாட்டில் 10 கோடிக்கும் அதிகமாக உள்ள சிறு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் தரும் ஒரு பெரிய ஆதாரமாக மாறும். நம் நாட்டின் பால் பொருட்கள் மிகப்பெரிய வெளிநாட்டு சந்தையை கொண்டுள்ளன. மேலும் நாம் வளர நிறைய வாய்ப்புகள் உள்ளன. முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று (நேற்று). அவரது நினைவாக நாடு முழுவதும் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


