இதையும் நாங்கள்தான் செய்தோம் என்று அவர்கள் சொல்வாாகள் என்று நினைத்தேன்... சமாஜ்வாடி கட்சியை கிண்டலடித்த மோடி

 
தொழிலதிபர் பியூஷ் ஜெயின், ரெய்டில் சிக்கிய பண குவியல்

கான்பூர் தொழிலதிபர் வீட்டில் பல நூறு கோடி பணம் ரொக்கமாக கைப்பற்ற விவகாரத்தில், இதையும் நாங்கள்தான் செய்தோம் என்று அவர்கள் சொல்வார்கள் என்று நினைத்தேன் என்று சமாஜ்வாடி கட்சியை பிரதமர் மோடி கிண்டலாக தாக்கினார்.

வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி. தலைமை இயக்குனரக அதிகாரிகள் மற்றும் ஜி.எஸ்.டி. புலானாய்வு துறை ஆகியவை கடந்த வாரம் கான்பூரை சேர்ந்த வாசனை பொருட்கள் விற்பனைசெய்யும் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் நடத்திய 120 மணி நேர மெகா ரெய்டில், ரூ.257 கோடி  ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் கிலோ கணக்கில் தங்கம், ஆடம்பர சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் சிக்கியது.  பியூஷ் ஜெயின் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பியூஷ் ஜெயின் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. 

மோடி

உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கிய வைத்த சரயு நஹர் தேசிய திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தனது அரசாங்கம் (முந்தைய அரசு) தொடங்கிய திட்டங்களுக்கு தற்போதைய பா.ஜ.க. அரசு பெயர் வாங்குகிறது என்று சமீபகாலமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி வந்தாா். அதேசமயம், பியூஷ் ஜெயின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது குறித்து அகிலேஷ் யாதவ் வாயை திறக்கவில்லை. இந்நிலையில்  பியூஷ் ஜெயினை விவகாரத்தை குறிப்பிட்டு சமாஜ்வாடி கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக கிண்டலாக தாக்கினார்.

ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது மை வீச்சு.. சமாஜ்வாடி கட்சி கண்டனம்

உத்தர பிரதேசம் கான்பூரில் மெட்ரோ ரயில்  திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: பணம் நிரப்பப்பட்ட பெட்டிகள் (பியூஷ் ஜெயின் விவகாரம்) வெளிவந்துள்ளன. இதையும் நாங்கள்தான் செய்தோம் என்று  அவர்கள் (சமாஜ்வாடி கட்சியினர்) சொல்வாாகள் என்று நினைத்தேன். கான்பூர் மக்கள் வணிகத்தையும், வர்த்தகத்தையும் நன்கு புரிந்து கொள்கிறார்கள். 2017க்கு முன் உத்தர பிரதேசம் முழுவதும் அவர்கள் தூவிய ஊழலின் வாசனை அனைவரும் பார்க்கும் வகையில் உள்ளது. ஆனால், இப்போது வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.  நாடே மலைத்து பார்த்த கரன்சி நோட்டுகளுக்கு பெயர் வாங்க முன்வருவதில்லை. இது அவர்களின் சாதனை மற்றும் அவர்களின் யதார்த்தம். உத்தர பிரதேசத்தில் முந்தைய அரசாங்கங்கள், ஐந்தாண்டுகளுக்கு மாநிலத்தை கொள்ளையடிக்க  லாட்டரி அடித்ததாக நினைத்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.