வறுமையை ஒழிக்க முழக்கங்களை எழுப்பியவர்கள், ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க போதுமான அளவு செய்யவில்லை.. மோடி

 
மோடி

சில அரசியல் கட்சிகள் வறுமையை ஒழிக்க பல முழக்கங்களை எழுப்பின. ஆனால் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க போதுமான அளவு செய்யவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கினார்.

மத்திய பிரதேசத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் சுமார் 5.21 லட்சம் பயனாளிகளின் கிரக பிரவேசம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது: சில அரசியல் கட்சிகள் வறுமையை ஒழிக்க பல முழக்கங்களை எழுப்பின. ஆனால் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க போதுமான அளவு செய்யவில்லை. ஏழைகளுக்கு அதிகாரம் கிடைத்தால், அது வறுமையை எதிர்த்துப் போராடும் தைரியத்தை அளிக்கிறது என்று நான் நம்புகிறேன். 

பிரதமர் வீடு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடு

ஒரு நேர்மையான அரசாங்கத்தின் முயற்சிகளும், அதிகாரம் பெற்ற ஏழைகளின் முயற்சிகளும் ஒன்றிணைந்தால் வறுமை போகும். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட சுமார் 2 கோடி வீடுகளின் உரிமை பெண்களுக்கும் உள்ளது. இந்த உரிமையானது குடும்பத்தில் பிற நிதி முடிவுகளை எடுப்பதில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தியுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள பெரிய பல்கலைக்கழங்களில் ஒரு ஆய்வு படிப்பாகும். 

காங்கிரஸ்

2014ம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஏழைகளுக்கு ஒரு சில லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. எங்கள் அரசாங்கம் சுமார் 2.5 கோடி வீடுகளை ஏழைகளுக்கு வழங்கியுள்ளது. இதில் 2 கோடி வீடுகள் கிராமங்களில் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா காரணமாக தடைகள் இருந்தபோதிலும், பணிகள் குறையவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க. அரசுகள் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அனைவரின் ஆதரவு அனைவரின் வளர்ச்சி என்ற மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.