"இங்க ஒன்னும் ஆட்ட முடியாது" - சங்பரிவாருக்கு தோழர் பினராயி விஜயன் ஸ்ட்ரிக்ட் வார்னிங்!
பாலக்காடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டர். அப்போது பேசிய அவர், "டெல்லியைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி 2015ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் 142ஆக இருந்தது. ஆனால் தற்போது 478ஆக அதிகரித்திருக்கிறது. கிறிஸ்தவ மக்கள் மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்துகிறார்கள். ஹரியானாவில் அம்பாலாவிலும் இதுபோன்று கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடந்தது.
குருஷேத்ராவில் தேவாலயத்துக்குள் நுழைந்து கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியைத் தடுத்துள்ளனர். இந்து மத பக்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். குருகிராமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குள் சங்பரிவார் அமைப்புகள் நுழைந்து தொல்லை செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் வலிமையான சமத்துவ சமுதாயம் இருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களை இங்கு ஒருபோதும் சங்பரிவார் அமைப்புகளால் நிகழ்த்த முடியாது. வெறுப்பு சம்பவங்கள் இங்கு நடக்கவும் விடமாட்டோம். பாஜகவுக்கு மாற்று இருக்கிறது என்பதை கேரளா நிரூபித்துள்ளது.
மிகப்பெரிய அளவில் மதமாற்றம் செய்வதாக கிறிஸ்தவ சமூகத்தின் மீது சங்பரிவார் அமைப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். 75 ஆண்டுகளாக நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கிறிஸ்தவ சமுதாயத்தின் மக்கள்தொகை 2.3 சதவீதம் மட்டும் தான் இருக்கிறது. எவ்வாறு அவர்கள் மக்களைக் கூட்டம் கூட்டமாக மதமாற்றம் செய்திருக்க முடியும்? மருத்துவச் சேவை, கல்விச் சேவை, தொண்டுப் பணிகளில் ஈடுபடும் கிறிஸ்தவ அமைப்பினர், மிகப்பெரிய அளவில் மதமாற்றம் இத்தனை ஆண்டுகளில் செய்திருந்தால், அவர்களின் மக்கள் தொகை அதிகரித்திருக்க வேண்டும் தானே? ஏன் அப்படியே இருக்கிறது.” என்றார்.