பசி ஏப்பம் -புளிச்ச ஏப்பம் : மெச்சும் ஓபிஎஸ் ஆணி

 
s

இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அறிவித்திருந்தது.  ஆனால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இப்போது இல்லத்தரசிகளுக்கு,  அதுவும் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மட்டும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.  இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன .  குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அணியினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  ஆனால் ஓபிஎஸ் அணியினர் இதை பாராட்டி வருகின்றனர்.  ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ் திராவிட மாடல் அரசின் இந்த தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் உரிமை தொகை வழங்குவதற்கு பாராட்டியிருக்கிறார்.

ச்ச்

’’மகளிருக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை வழங்குவோம் என்கிற தி.மு.க.வின் பிரதான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை தமிழக முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் தகுதியுடைய பெண்களுக்கு வழங்கப்படும் என்னும் அடிக்கோடிட்ட  அம்சத்தை பிடித்துக் கொண்டு பலரும் அரசை விமர்சிக்கிறார்கள். வழக்கம் போல வலைதளங்களில் கேலி கிண்டல் செய்கின்றனர்.

அனைத்து மகளிருக்கும் என்று சொல்லி விட்டு இப்போது தகுதியுடையோருக்கு என்று சொல்லலாமா என்னும் கேள்வியை எதிர்கட்சிகள் முன்வைக்கின்றன.
இது நியாயமற்ற வாதம். உதாரணமாக அனைவருக்கும் கொரானா தடுப்பூசி போடப்படும் என அரசாங்கம் சொன்ன போதும் குழந்தைகள் சிறுவர்களுக்கு அதனை போடவில்லையே என்று கேட்க முடியாது.

காரணம் இயற்கையிலேயே குழந்தைகள் சிறார்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருப்பதால் அது அவசியப்படாமல்  போகிறது. அது போலத் தான் மக்கள் நலத் திட்டங்கள் அனைவருக்கும் என அறிவிக்கப்பட்டாலும் அது அவசியப்படாத அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்ட குடும்பங்களை கழித்து விட்டு தான் அத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப் படுகின்றன.

ம்

அந்த வகையில் மாதம் ஆயிரம் உதவித் தொகை என்பது நலிந்த நடுத்தர வர்க்கத்தினருக்குத் தான் முக்கியமாகிறது. முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவர் சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பச்சைமையில் கையெழுத்து போடும் பதவிகளில் இருப்பவர்கள் அரசு ஊழியர்கள் மேல்மட்ட பதவிகளில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர்கள் வருமானவரி செலுத்தும் அளவுக்கு உயர்நிலை பொருளாதார பிரிவுகளில் இருப்போர்.. என பல படி நிலைகளில் இருப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை ஆயிரம் என்பது அவசியமில்லாதது என்பதே உண்மை.

ம்

இதற்கு மாறாக அனைவருக்கும் ஆயிரம் தந்தால் அது அரசின் ஊதாரித்தனம்  என்பது மட்டுமன்றி ஆளும் அரசை வழிநடத்தும் கட்சியை ஆதரிப்பதற்காக  மக்களுக்கு தரப்படும் லஞ்சமாக அது கருதப்பட்டுவிடும்.  எனவே செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் முதல் அமல்படுத்த இருக்கிற மாதம் ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை திட்டத்தை தகுதிகளை நிர்ணயம் செய்து உரியவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்படவேண்டும்.

பசி ஏப்பக் காரர்களுக்கு உணவும் புளிச்ச ஏப்பக் காரர்களுக்கு செரிமான மருந்தும் தரப்படுவது தான் ஒரு அறிவார்ந்த அரசின் செயல்பாடாக வேண்டும். அந்த வகை அரசாக திராவிட மாடல் அரசு இருக்கட்டும்.’’