"ஆமா இதான் சான்ஸ் பிரதமரே.. பெகாசஸ் அப்டேட் கேளுங்க" - ப.சிதம்பரம் நக்கல்!
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கட்டுரை தான் இந்திய அரசியலில் மீண்டும் பெகாசஸ் புயலை கிளப்பியுள்ளது. செல்போன்களை ஒட்டுக் கேட்க பெகாசஸ் ஸ்பைவேர் உளவு செயலியை இந்தியா எப்போது வாங்கியது என்ற தகவலை அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது நாளிதழ். இதுவரை நாடாளுமன்றத்திலும் சரி உச்ச நீதிமன்றத்திலும் சரி தாங்கள் அப்படி ஒரு ஸ்பைவேரை வாங்கவே இல்லை என சத்தியம் செய்யாத குறையாக மத்திய அரசு கூறி வந்துள்ளது. ஆனால் அதெல்லாம் பொய் பொய்யை தவிர வேறொன்றும் இல்லை என சொல்லாமல் சொல்லியிருக்கிறது அக்கட்டுரை.
பிரதமர் மோடி 2017ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்றார். இஸ்ரேல் சென்ற முதல் பிரதமர் அவர் தான். அவ்வளவு நாளாக இஸ்ரேல்-இந்தியா உறவில் நிலவிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்குப் பின்னால் இருந்தது பாலஸ்தீன விவகாரம் தான். பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததால் இஸ்ரேல் மகிழ்ச்சி கொண்டது. அந்த மகிழ்ச்சியில் 2017ஆம் ஆண்டு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை, ராணுவ தளவாடங்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகின. இது ஏற்கெனவே வந்த செய்தி தான். இதில் சொல்லாத செய்தியை தான் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பெகாசஸ் ஸ்பைவேரும் வாங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசுக்குச் சொந்தமான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த பெகாசஸ் ஸ்பைவேர். இதற்கான தொகை தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்தச் செய்தி வெளியாகியிருப்பதால் எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் இதுகுறித்து கேள்வியெழுப்ப திட்டமிட்டுள்ளன.
அதற்கு வெள்ளோட்டமாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர் எதிர்க்கட்சி தலைவர்கள். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும் கலாய்த்திருக்கிறார். இஸ்ரேல் உறவு குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "இந்தியா-இஸ்ரேல் உறவில் புதிய இலக்குகளை உருவாக்க இதுவே சிறந்த நேரம்” என பேசியுள்ளார். இதனைச் சுட்டிக்காட்டியுள்ள சிதம்பரம், "நிச்சயமாக, பெகாசஸ் ஸ்பைவேரின் புதிய அப்டேட் வெர்சன் ஏதேனும் உள்ளதா என்று இஸ்ரேலிடம் கேட்க இதுவே சிறந்த நேரம்.
The last deal was for $2 billion. India can do better this time. If we get more sophisticated spyware ahead of the 2024 elections, we can give them even $4 billion
— P. Chidambaram (@PChidambaram_IN) January 30, 2022
கடைசி ஒப்பந்தம் 2 பில்லியன் டாலருக்கு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இம்முறை இன்னும் அதிகமான விலையில் இஸ்ரேலுடன் இந்தியா டீல் பேச முடியும். 2024ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலுக்கு முன்பாக இன்னும் அதிநவீன ஸ்பைவேரை இஸ்ரேல் கொடுத்தால் அவர்களுக்கு 4 பில்லியன் டாலர்களைக் கூட இந்தியா கொடுக்கலாம்” என நக்கலடிக்கும் விதமாக விமர்சித்துள்ளார். தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அனைவரும் இந்த ட்வீட்டை பகிர்ந்து மத்திய அரசை நோக்கி கேள்வியெழுப்பி வருகின்றனர். இருந்தாலும் வழக்கம் போல ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய அரசு சொல்லும் என தெரிகிறது.