விரைவில் ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் நகலாக மாறும்... ப.சிதம்பரம்

 
ப சிதம்பரம்

அயோத்திக்கு செல்லும் ரயிலை அரவிந்த கெஜ்ரிவால் கொடியசைத்து தொடங்கி வைத்ததை மேற்கோள் காட்டி, விரைவில் ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் நகலாக மாறும் என்று ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கடந்த 2019ம் ஆண்டு முதல் முதல்வர் புனித யாத்திரை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள் வாழ்நாளில் ஒரு முறை புனிதப் பயணம் மேற்கொள்ள இலவச பயண வசதி அளிக்கப்படுகிறது. ஒரு தொகுதிக்கு 1,100 மூத்த குடிமக்கள் வீதம் ஆண்டுக்கு அதிகபட்சம் மொத்தம் 77 ஆயிரம் மூத்த குடிமக்களுக்கு இந்த வசதிகள் வழங்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின்கீழ் மொத்தம் 35,080 மூத்த குடிமக்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அண்மையில், முதல்வரின் புனித யாத்திரை பட்டியலில் அயோத்தியும் சேர்க்க முதல்வர் கெஜ்ரிவால் அரசு ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. கெஜ்ரிவால் மென்மையான இந்துத்துவாவை ஊக்குவிப்பதாகவும், 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இதனை கெஜ்ரிவால் மறுத்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய தலைநகரில் இருந்து உத்தர பிரதேசம் அயோத்திக்கு செல்லும் முதல்வரின் புனித யாத்திரை திட்டத்தின் முதல் ரயிலை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பா.ஜ.க.

அயோத்திக்கு செல்லும் ரயிலை அரவிந்த கெஜ்ரிவால் கொடியசைத்து தொடங்கி வைத்ததை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். ப.சிதம்பரம் டிவிட்டரில், ஆம் ஆத்மி பா.ஜ.க.வை எவ்வளவு அதிகமாக பின்பற்றுகிறது, குறைவான தொடர்புடையதாக மாறும். விரைவில் ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் நகலாக மாறும் என்று பதிவு செய்துள்ளார்.