மம்தா மற்றும் காங்கிரசின் அணுகுமுறைகள் ஒன்றிணைந்தால் நாட்டுக்கு நல்லது.. ப.சிதம்பரம்

 
ப சிதம்பரம்

மம்தா பானர்ஜியின் அணுகுமுறை வேறு. எங்களுக்கு வேறு அணுகுமுறை உள்ளது. இரண்டு அணுகுமுறைகளும் ஒன்றிணைந்தால் அது நாட்டுக்கு நல்லது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தன்னை இந்தியாவின் எதிர்க்கட்சியின் முகமாக சித்தரித்து வருகிறார். மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸை தவிர்த்து மற்ற எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரசும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி அண்மையில் மும்பை சென்று இருந்தபோது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை, அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை எளிதாக தோற்கடித்து விடலாம் என்று காங்கிரஸை மறைமுகமாக தாக்கினார். இந்த சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரசும், பா.ஜ.க.வும் இணைந்தால் அது நாட்டுக்கு நல்லது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறுகையில், மம்தா பானர்ஜியின் அணுகுமுறை வேறு. எங்களுக்கு வேறு அணுகுமுறை உள்ளது. இரண்டு அணுகுமுறைகளும் ஒன்றிணைந்தால் அது நாட்டுக்கு நல்லது. நாட்டில் பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சி தேவை என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று சஞ்சய் ரவுத் பொறுப்பான அறிக்கையை வெளியிட்டார் என்று தெரிவித்தார்.