சின்னம்மா பொதுச்செயலாளராகப் பதவியேற்க ஓபிஎஸ் ஆதரவு!
சசிகலா விடுதலையானதிலிருந்தே தமிழக அரசியல் களம் தகித்துக்கொண்டிருக்கிறது. நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தேர்தலைக் காட்டிலும் சசிகலாவுடன் எந்தெந்த அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் இணைவார்கள் என்ற பேச்சே அடிபடுகிறது. சசிகலா ரெஸ்ட் எடுத்துக்கொண்டே முக்கிய நிர்வாகிகளை போனில் அழைத்து நலம் விசாரித்துவருகிறாராம். நேரடியாகச் சந்தித்தால் முதல்வர் எடப்பாடி தரப்பிலிருந்து அழுத்தம் கூடும் என்பதால் இந்தத் திட்டமாம். எடப்பாடி தரப்பும் சாதாரணமான தரப்பு இல்லை. யாரெல்லாம் சசிகலா பக்கம் நெருங்குகிறார்கள் என உளவுத்துறையைக் கொண்டு நெருக்கிவருகிறார்கள்.
இச்சூழலில் ஒவ்வொரு அதிமுக அமைச்சரின் பேட்டியும் முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அமைச்சர் வேலுமணி, சசிகலாவுக்கும் நமக்கும் இருப்பது அண்ணன்-தம்பி பிரச்சினை என்றார். அதேபோல அவர் சசிகலாவை எதிர்க்கும் எடப்பாடியின் மூவ்களில் எஸ்கேப் ஆகிவருகிறார். அண்ணன்-தம்பி கருத்தை இவர் கூறினாலும் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது என்னவோ சாட்சாத் துணை முதல்வர் ஓபிஎஸ் தான். மூன்று வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அம்மா பேரவை கூட்டத்தில் இக்கருத்தை உதிர்த்தார்.
முதல்வர் தரப்பில் எடப்பாடி, அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் மட்டுமே சசிகலாவை வெளிப்படையாக விமர்சிக்கின்றனர். இதுவரை ஓபிஎஸ் எதுவும் வாய் திறந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று வெளியான நமது எம்ஜிஆர் நாளிதழில், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தினமணி செய்தித்தாளில் வெளியிட்ட செய்தி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. “சின்னம்மா கழகத்தின் பொதுச்செயலாளராகப் பதவியேற்பதற்கு ஓபிஎஸ் ஆதரவு!” என்ற தலைப்பில் அச்செய்தி மீண்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2016ஆம் ஆண்டு சசிகலா பொதுச்செயலாளராக ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்திருந்தார். குறிப்பாக, அவர் பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி போயஸ் கார்டன் சென்று நேரடியாகவே சசிகலா கையில் ஒப்படைத்தார். அப்போது அவர் பேசிய வார்த்தைகளைக் குறிப்பிட்டு தினமணியில் இச்செய்தி வெளியாகியிருந்தது. ஓபிஎஸ் சசிகலாவுடன் ரகசிய உடன்படிக்கை மேற்கொண்டிருப்பது இதன்மூலம் தெரியவருவதாகக் கூறுகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளாரகத் தொடர்வதில் ஓபிஎஸ்க்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். இச்செய்தி எடப்பாடி தரப்பிற்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.