அந்த ஒரு கேள்வி... அப்படியே ஆடிப்போன ஓபிஎஸ் - நொடிப்பொழுதில் எஸ்கேப்!
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ் ,பலராமன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்த நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தமிழ்நாடு காவல் துறை 6 தனிப்படைகள் அமைத்துள்ளது.
தற்போது அவர் தலைமறைவாக இருப்பதால் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் தலைமறைவாகி உள்ளதாக துப்பு கிடைத்ததால், ஒரு தனிப்படை பெங்களுர் சென்றுள்ளது. அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இச்சூழலில் மற்றொரு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கையில், "ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இல்லை; சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார், ராஜேந்திரபாலாஜிக்கு அதிமுக துணை நிற்கும்" என்றார்.
இதே கேள்வி இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸிடம் முன்வைக்கப்பட்டது. "நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது. நீதிமன்ற கட்டுப்பாட்டில் அது இருப்பதால், அதுகுறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை” எனக் கூறி எஸ்கேப் ஆகினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை பள்ளி விபத்து, எல்லோரின் மனதிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு குறித்து அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.