ஓபிஎஸ் ஒரு மண் குதிரை - திமுக கடும் தாக்கு
ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வரும் நிலையில் ஓபிஎஸ் ஒரு மண் குதிரை என்ற திமுக கடுமையாக சாடி இருக்கிறது.
சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை பற்றி ஓபிஎஸ் புகழ்ந்த போது எடப்பாடி பழனிச்சாமியு, அவரது ஆதரவாளர்களும் அதை கடுமையாக விமர்சித்தனர். தீய சக்தி என்று எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சொன்ன ஒரு கட்சியை சார்ந்த தலைவரை எப்படி புகழ்ந்து பேசலாம் என்று ஓபிஎஸ்-க்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர் .
இதை அடுத்து தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதோடு திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னதால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர். அப்பாவும் மகனும் இப்படி திமுகவை புகழ்ந்து வருவதால் ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்லி வந்தனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு விவகாரத்திலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஓபிஎஸ் க்கு சாதகமாக அமையாத நிலையில் திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்ட எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்தது என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி இதழில் பட்டிக்காடும் பட்டணமும் என்கிற தலைப்பில், ’’பட்டிக்காடு: தம்பி, இன்று தினமலர் முதல் பக்கத்தில் கார்ட்டூனை பார்த்தீர்களா என்ன சொல்ல வருகிறார்கள் ?
பட்டணம் : ஆமாம் ஐயா , அமைச்சர் உதயநிதி ஓபிஎஸ் கவர்னராக பதவி ஏற்பார் என்று சொல்லிவிட்டார் . அதனால் பி டீம் எனது குற்றம் சாட்டப்பட்டவருக்கு பரிந்துரை செய்கிறாரா? ஒன்றிய பாஜக ஆட்சியில் கைவிடப்பட்டவர்களுக்கும் பரிந்துரை உள்ளவர்களுக்கும் கவர்னர் பதவி என்பது சூசகமாக பிடித்துக் காட்டி இருக்கிறார் உதயநிதி.
ஓபிஎஸ் தனது மகனை அன்றி வேறு யாருக்கு சாதகமாக அரசியல் செய்கிறார் என்பது அவருக்கே தெரியாது. அவர் யாருக்கு வேண்டுமானாலும் பி டீமாக இருந்து விட்டுப் போகட்டும். நிச்சயமாக திமுகவுக்கு இல்லை. காரணம், திமுக எதைச் செய்தாலும் அனைவருக்கும் தெரிய வெளிப்படையாகத் தான் செய்யும் என்பதை தமிழர்கள் அறிவார்கள். மேலும் ஓபிஎஸ் ஒரு மண் குதிரை என்று எல்லோரும் அறிந்து வைத்திருப்பதை தினமலர் அறிந்திருக்கவில்லையே என்பது சோகம் தானே?’’