’3000 மருத்துவ இடங்கள்’ உருவாக்கிய அதிமுக சாதனையை, தன் சாதனையாக காட்டிக்கொள்ளும் திமுக - ஓபிஎஸ் கண்டனம்...

 
“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா?; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை!


தமிழகத்தில் 3000 மருத்துவ இடங்களை அதிகரித்து  அதிமுக படைத்த சாதனையை தன் சாதனை போல் திமுக காட்டிக்கொள்வது கண்டனத்துக்குரியது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

” ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சமுதாயத்தால் மட்டுமே ஆக்கபூர்வமான பங்கினை அளிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும்,  மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிதாக மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க எடுக்கப்பட்ட முனைப்பான நடவடிக்கைகள் காரணமாக மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே மிகச் சிறப்பானதொரு சாதனையை இயற்றியது மட்டுமல்லாமல் உலகத்தின் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும் அளவுக்கு தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: போலீசில் புகார் அளித்த மருத்துவக் கல்லூரி!
 இந்தியாவில் உள்ள 593 மருத்துவ கல்லூரிகளில், தமிழ்நாட்டில் மட்டும் 69  மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும்,  மொத்தமுள்ள 45 ஆயிரத்து 698 மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரத்து 375 மருத்துவ இடங்கள் இருப்பதாகவும், மொத்தமுள்ள 312 அரசு கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 37 அரசு கல்லூரிகள் இருப்பதாகவும், மொத்தமுள்ள 22 ஆயிரத்து 933 மருத்துவ இடங்களில் தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரத்து 125 மருத்துவ இடங்கள் இருப்பதாகவும் தேசிய மருத்துவ குழு தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இதற்கு காரணம் அதிமுக  ஆட்சியில் எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தான் என்பதை ஆணித்தரமாக நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 1954ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் எட்டு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இதனை அடுத்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கடலூர் சேலம் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டன. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி காலத்தில் ஈரோடு, கன்னியாகுமரி, தேனி, வேலூர், சிவகங்கை, திருவண்ணாமலை ,சென்னை, கோயம்புத்தூர் என எட்டு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டை,  கரூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன.  மருத்துவத்திற்கு என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் என்ற தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான்.

ஓபிஎஸ்
 இதுதவிர மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டு மத்திய அரசின் 50 விழுக்காடு நிதி உதவியுடன் ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி,  நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர் ,அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அரசின் ஆணையை பெற்று அதற்கான கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி ஒரு சரித்திர சாதனையை அதிமுக அரசு படைத்தது.

 இதன் விளைவாக ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 150 இடங்கள் என 1650 மருத்துவர் இடங்கள் கூடுதலாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மட்டும் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகளை துவங்கிய வகையில் 700 இடங்கள்,  ஏற்கனவே செய்யப்பட்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை உயர்த்திய வகையில் 650 இடங்கள்,  புதிதாக அனுமதிக்கப்பட்ட 11 அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் 1650 இடங்கள் என 3000 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டன.

ஸ்டாலின்
உண்மை நிலை இவ்வாறு இருக்க ”முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள்” என்று பத்திரிக்கைகள் மூலம் விளம்பரப்படுத்திக் கொள்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படைத்த சாதனையை, தன் சாதனை போல்  காட்டிக் கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதமே ஆகியுள்ள நிலையில் இத்தனை மருத்துவ இடங்களை உருவாக்க முடியுமா என்பதை மக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள். மக்களுக்கு உண்மை எது என்பது நன்கு தெரியும். இனி வரும் காலங்களிலாவது ”உண்மை  எனும் கைவினைக் சான்றோர்க்கு வழிகாட்டும் விளக்கு” என்பதற்கு ஏற்ப திமுக நடந்துகொள்ள வேண்டும். “  என்று குறிப்பிட்டுள்ளார்.