கட்சியை விட்டு வெளியேறுவதாக இருந்தால் தாராளமாக வெளியேறலாம்.. உபேந்திர குஷ்வாஹாவை மறைமுகமாக சாடிய நிதிஷ் குமார்
யாராவது எங்கள் கட்சிக்கு வந்துவிட்டு வெளியேறினால், அப்போது அவர் கட்சியை விட்டு வெளியேற சுதந்திரமாக இருக்கிறார் என்று அண்மையில் தங்கள் கட்சியில் இணைந்த உபேந்திர குஷ்வாஹாவை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் மறைமுகமாக தாக்கினார்.
ஐக்கிய ஜனதா கட்சியில் அண்மையில் மீண்டும் இணைந்த உபேந்திர குஷ்வாஹா பா.ஜ.கவுடன் தொடர்பில் இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து உபேந்திர குஷ்வாஹாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கும் இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தனது சமாதான யாத்திரையின்போது பங்காவில் பேசுகையில் கூறியதாவது: யாராவது எங்கள் கட்சிக்கு வந்துவிட்டு வெளியேறினால், அப்போது அவர் கட்சியை விட்டு வெளியேற சுதந்திரமாக இருக்கிறார்.
நான் உபேந்திர குஷ்வாஹாவை அரசியலில் ஊக்குவித்து எம்.எல்.ஏ. ஆக்கினேன். ஆனால் அவர் அதையும் மீறி கட்சியிலிருந்து வெளியேறினார். அவர் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் திரும்பியதும், நான் அவரை மாநிலங்களவை எம்.பி.யாக ஆக்கினேன். ஆனால் அதன் பிறகு அவர் மீண்டும் கட்சியில் இருந்து விலகினார். இப்போது மூன்றாவது முறையாக அவர் வந்துள்ளார்.
ஆனால் கடந்த 2 மாதங்களில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் என்னிடம் பேசவில்லை. 2019ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்றபோது, நாங்கள் நான்கு அமைச்சரவை பதவிகளை கேட்டோம். ஆனால் எங்களுக்கு ஒன்றுதான் வழங்கப்பட்டது. தினமும் யாராவது எனக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தால், அவர் ஏற்கனவே மற்ற கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் என்பதையே இது குறிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.